புற்றுநோய் பாதிப்பில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஹிந்தி நடிகர் இம்ரான் ஆஸ்மி கேட்டுக் கொண்டார்.
பெங்களூரில் நியூ இந்தியா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கான கட்டட தொடக்க விழாவில் அவர் பேசியது:
ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டியது அனைவரின் கடமை. புற்றுநோயால் பாதிக்கப்படும் செல்வந்தர்கள் உயர்தர சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு வருகின்றனர். ஆனால், ஏழைகள் பலர் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்க நேரிடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு நியூ இந்திய அறக்கட்டளையினர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு இலவசமாக உயர் தர சிகிச்சை வழங்க வேண்டும் என்ற நோக்கில், ரூ.200 கோடி மதிப்பில் நிலமும், நிதியும் வழங்கியுள்ளனர். இதன் மூலம் கட்டப்படும் மருத்துவமனையில் எந்த இடத்திலும் பணம் செலுத்தாமல் உரிய சிகிச்சை வழங்க முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
இதன்மூலம் புற்றுநோயை அறவே ஒழிக்க முன் வந்துள்ள அறக்கட்டளையைப் பாராட்ட வேண்டும். அடுத்த 30 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பில்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் கைக் கோத்து செயல்பட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நியூ இந்தியா அறக்கட்டளை அறங்காவலர்கள் விஜய்டாடா, அம்ரிதாடாடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.