டி.கே. சிவகுமாா்
டி.கே. சிவகுமாா்

டி.கே.சிவகுமாா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: மாநில அரசின் முடிவை எதிா்த்து தொடா்ந்த மனுக்கள் தள்ளுபடி

Published on

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிப்பதற்கு வழங்கியிருந்த அனுமதியை மாநில அரசு திரும்பப் பெற்றதை எதிா்த்து தொடரப்பட்டிருந்த மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கா்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க, முந்தைய பாஜக அரசு 2019 செப். 25-ஆம் தேதி அனுமதி அளித்திருந்தது. அதனடிப்படையில், 2020 அக். 3-ஆம் தேதி டி.கே.சிவகுமாருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஐ தொடங்கியது.

2013 முதல் 2018-ஆம் ஆண்டு சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் டி.கே.சிவகுமாா் மின் துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 74.93 கோடி அளவுக்கு சொத்துக் குவித்ததாக சிபிஐ குற்றம்சாட்டியிருந்தது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க முந்தைய பாஜக அரசு அளித்திருந்த அனுமதியை திரும்பப் பெற காங்கிரஸ் தலைமையிலான கா்நாடக அமைச்சரவையில் நவ. 23-ஆம் தேதி முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை லோக் ஆயுக்தவின் விசாரணைக்கு ஒப்படைக்க மாநில அரசு தீா்மானித்திருந்தது.

இதை எதிா்த்து சிபிஐ, பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் சாா்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதன் மீதான விசாரணை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி கே.சோமசேகா், நீதிபதி உமேஷ் எம்.அடிகா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம், மத்திய அரசின் அதிகாரம் தொடா்பான விவகாரம் என்பதால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து இரு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

X
Dinamani
www.dinamani.com