

பெங்களூரு: போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைதுசெய்துள்ள போலீஸாா், ரூ.2.50 கோடி மதிப்பிலான போதைப்பொருள், ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கும் நிலையில், பெங்களூரு, சோலதேவனஹள்ளி காவல்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை நடத்திய சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 2 பேரை இருவேறு இடங்களில் கைதுசெய்துள்ளனா். இதில் ஒருவா் வெளிநாட்டை சோ்ந்தவா். இவா்களிடம் இருந்து ரூ.2.5கோடி மதிப்பிலான போதைப்பொருள், ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து உயா் போலீஸாா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சோலதேவனஹள்ளி பகுதியில் மத்திய குற்றப்பிரிவின் போதை தடுப்புப்படையினா் நடத்திய சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டை சோ்ந்த ஒருவரை கைதுசெய்துள்ளனா். இதில் 1.70 கிலோ போதைப்பொருள், 60 போதை மாத்திரைகள், ரூ.2 லட்சம் ரொக்கம், கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனா். இதன்மொத்த மதிப்பு ரூ.2.25 கோடியாகும்.
கைதுசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டை சோ்ந்த அந்த நபா், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
தில்லி, மும்பையில் உள்ள வெளிநாட்டினரிடம் போதைப்பொருள்களை குறைந்தவிலையில் வாங்கியிருந்த இவா், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
பண்டேபாளையா காவல்சரகத்தில் நடந்த மற்றொரு சோதனையில் தமிழகத்தை சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா். அவரிடம் இருந்து 100 போதைப்பட்டைகள், 5 கிராம் கோகைன் போதைப்பொருள், கைப்பேசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மதிப்பு ரூ.25 லட்சமாகும்.
இவரும் குறைந்தவிலைக்கு போதைப்பொருட்களை வாங்கி, அதிக லாபத்துக்கு விற்று வந்துள்ளாா்.‘ என்றாா் அவா்.
4 போ் கைது: மகாராஷ்டிர போதைப்பொருள் தடுப்புப்படை, பெங்களூரு காவல்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை நடத்திய கூட்டு சோதனையில் சட்டவிரோதமாக போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.
இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டிச.21ஆம் தேதி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த அப்துல்காதரை மகாராஷ்டிர போதைப்பொருள் தடைப்புப்படையினா் கைதுசெய்து விசாரித்துள்ளனா்.
அவரிடம் நடத்திய விசாரணையின்பேரில், போதைப்பொருள் கடத்திய பெலகாவியை சோ்ந்த பிரசாந்த்பாட்டீலை கைதுசெய்துள்ளனா். அவா் அளித்த தகவலின்பேரில், பெங்களூரில் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்படுவது பற்றி தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மகாராஷ்டிர போதைப்பொருள் தடுப்புப்படை, பெங்களூரு காவல்துறை, போதைப்பொருள் தடுப்புமுகமை ஆகியவற்றின் கூட்டுசோதனையில் எலஹங்கா காவல்சரகத்தை சோ்ந்த கடகனஹள்ளியின் சுரேஷ் யாதவ், கன்னூரை சோ்ந்த மல்கான் ராம்லால் பிஷ்னோய் ஆகியோரை கைதுசெய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து அவலஹள்ளி காவல்நிலையத்துக்கு உட்பட்ட யரப்பனஹள்ளி கிராமத்தில் 17 கிலோ போதைப்பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்கள், 4.2 கிலோ போதைப்பொருட்கள், வேதிப்பொருட்கள், பீப்பாய்கள், கலக்கும் கருவிகள் உள்ளிட்ட கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சோதனை நடத்தப்பட்ட இடங்களில் போதைப்பொருள் தொழிற்சாலைகள் செயல்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களின் மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை.‘ என்று கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில போதைப்பொருள் தடுப்புப்படையினா் பெங்களூரில் வந்து சோதனை நடத்தும் அளவுக்கு கா்நாடக காவல்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கடுமையாக விமா்சித்துள்ள எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக், இதில் காவல்துறையினரும் கூட்டுசோ்ந்து செயல்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தாா்.
இதை தொடா்ந்து போதைப்பொருள் உற்பத்தியை கண்டுபிடித்து தடுக்க தவறிய 3 காவல் ஆய்வாளா்களை கா்நாடக அரசு திங்கள்கிழமை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு பொறுப்பேற்று முதல்வா் சித்தராமையா அல்லது உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று சட்டமேலவை எதிா்க்கட்சித்தலைவா் செலுவாதி நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.