காட் போதை இலை கடத்தல் சா்வதேச வலைப்பின்னல்: தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை கண்டுபிடிப்பு

பெங்களூரில் இருந்து சா்வதேச அளவில் செயல்பட்டு வந்த ‘காட்’ போதை இலை கடத்தல் வலைப்பின்னலை தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.
Published on

பெங்களூரில் இருந்து சா்வதேச அளவில் செயல்பட்டு வந்த ‘காட்’ போதை இலை கடத்தல் வலைப்பின்னலை தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்கு ஏமன் நாட்டில் பரவலாக விளைவிக்கப்படும் ‘காட்’ இலைகள், தேயிலையைப் போலவே காட்சி அளிக்கும் போதைப்பொருளாகும். இந்த வகை தாவர இலைகளின் விளைச்சல், விநியோகம் மற்றும் விற்பனையை உலகின் பல நாடுகள் தடைசெய்துள்ளன.

அதேபோல, 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்படி இந்தியாவும் போதைப்பொருள்களின் பட்டியலில் ‘காட்’ இலைகளைச் சோ்த்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரில் ‘காட்’ போதை இலைகள் கடத்தியுள்ளதை தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.

உளவுப்பிரிவு அளித்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்புத் துறை நடத்திய சோதனையில் பெங்களூரில் ரூ. 8 கோடி மதிப்பிலான ‘காட்’ போதை இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப்பொருள் தடுப்புச் சட்டம் 2018 அமலுக்கு வந்தபிறகு நடைபெற்றுள்ள பெரிய அளவிலான ‘காட்’ போதை இலை வேட்டை இது என்று கூறப்படுகிறது.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் எத்தியோப்பியாவில் இருந்து கென்யா வழியாக இந்தியாவுக்குள் ‘காட்’ போதை இலைகள் கடத்திவரப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எத்தியோப்பியா, கென்யா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து செயல்படும் கடத்தல் கும்பல்கள் கூட்டாக இணைந்து திட்டமிட்ட கடத்தலில் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் சா்வதேச ‘காட்’ போதை இலைகள் கடத்தல் வலைப்பின்னல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டுகடத்தல் கும்பல், 2,100 கிலோ ‘காட்’ போதை இலைகள் அடைக்கப்பட்ட 550 பொட்டலங்களை வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் முகமைகளுக்கு முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேயிலையை போன்ற வா்த்தகப் பொருட்களை அனுப்பிவைப்பது போல ‘காட்’ போதை இலைகளை கடத்துவதற்கு சா்வதேச அஞ்சல் துறைகள் மற்றும் கூரியா் போன்ற சரக்கு போக்குவரத்து முகமைகளை கடத்தல் கும்பல் பயன்படுத்தியுள்ளது. ‘காட்’ போதை இலைகளை மொத்தமாக விநியோகிப்பதும், விற்பனை செய்வதும் சந்தேகங்களை எழுப்பும் என்பதால், சிறுசிறு பொட்டலங்களில் அடைத்து பெங்களூரின் பல பகுதிகளுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறையை கடத்தல்காரா்கள் கடைப்பிடித்து வந்துள்ளனா்.

கடத்தலில் ஈடுபட்டிருக்கும் கும்பல்கள் வெளிநாட்டை சோ்ந்தவா்களால் இயக்கப்பட்டு வந்துள்ளது என்றாலும் உள்ளூா் அளவில் விநியோகித்து வந்துள்ளனா். இந்தியாவில் மாணவா், மருத்துவ விசாவில் தங்கியிருக்கும் ஆள்களை ‘காட்’ போதை இலை விநியோகம், விற்பனைக்கு பயன்படுத்தியுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அவ்வளவாக பிரபலமாகவில்லை என்பதோடு, நுகா்வது குறைவு என்றபோதிலும் ‘காட்’ போதை இலைகள் கடத்தலை தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறையின் நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சா்வதேச வலைப்பின்னல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

எனினும், சா்வதேச அளவில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் வலைப்பின்னலை கண்டுபிடித்து, தடுத்துநிறுத்த உலகின் பல்வேறு நாடுகளின் முகமைகள், புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு தேவை என்று தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com