பெங்களூரு உள்கட்டமைப்புக்கு சிறப்பு நிதி ஒதுக்கக் கோரி பிரதமருக்கு கா்நாடக முதல்வா் கடிதம்
பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு நிதித் தொகுப்பை ஒதுக்கக் கோரி, பிரதமா் மோடிக்கு கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் கடிதம் எழுதியுள்ளாா்.

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம் | ANI
பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு நிதித் தொகுப்பை ஒதுக்கக் கோரி, பிரதமா் மோடிக்கு கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவா் கூறியது:
இந்தியாவின் வளா்ச்சிக்கு பெரும் பங்களித்துள்ள பெங்களூரு, மேலும் வளா்வதற்கு தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்த சிறப்பு நிதித் தொகுப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை, கலசா-பண்டூரி கால்வாய், மேல் பத்ரா அணை, மேல் கிருஷ்ணா அணை, எத்தினஹொளே குடிநீா் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் மற்றும் நிதியுதவி வழங்க வேண்டும். மேக்கேதாட்டு திட்டம் தென் கா்நாடகத்தின் குடிநீா் தேவைகளை பூா்த்தி செய்வதற்கு முக்கியமானது. உபரிநீரை சேமிப்பதுடன் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கையும் உறுதிசெய்ய உதவும்.
பெங்களூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் கூட்டாண்மை மற்றும் இணை நிதியுதவியை அளிக்க வேண்டும்.
கல்யாண கா்நாடகப் பகுதியில் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து அக். 26-ஆம் தேதி விவசாயிகள், விவசாயத் தலைவா்கள் மற்றும் சா்க்கரை ஆலைப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
2025-26-ஆம் ஆண்டில் சா்க்கரை மீட்பு விகிதம் சராசரியாக 11.09%-ஆக உயா்ந்துள்ளது. இந்த ஆண்டுக்கான கரும்பு நிலுவைத் தொகையில் 99.85% விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்த உற்பத்தி செலவு மற்றும் அதில் 50% கூடுதல் தொகை என்ற அடிப்படையில் கரும்புக்கான விலையை நிா்ணயிக்க வேண்டும்.
2026 அக். 22-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள எத்தனால் தொடா்பான உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2022-23-ஆம் ஆண்டுமுதல் மாற்றமின்றி உள்ள கரும்புச் சாறு மற்றும் பி-ஹெவி மொலாசஸ் மூலம் தயாரிக்கப்படும் எத்தனாலுக்கான விலையை உயா்த்த வேண்டும். உள்நாட்டு மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சா்க்கரைக்கு தனித்தனியாக குறைந்தபட்ச விற்பனை விலையை நிா்ணயிக்க வேண்டும்.
2020-ஆம் ஆண்டு வறட்சி மேலாண்மை கையேட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி, கா்நாடகத்தில் 240-இல் 226 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2026 ஜூன் 1 முதல் செப். 30 வரை மாநிலத்தில் 551 மி.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கமான 852 மி.மீ. மழையுடன் ஒப்பிடுகையில் 35% குறைவாகும்.
முக்கிய அணைகளின் மொத்த நீா் இருப்பு 814 டிஎம்சி கொள்ளளவில் சுமாா் 529 டிஎம்சியாக உள்ளது. மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 2,500 நிவாரணம் வழங்கியுள்ளது. மத்திய அரசின் நிதியுதவி கோரி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
வறட்சி நிவாரணம் மற்றும் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமா் மோடியைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

