பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சிபிஐ ‘ப்ளூகாா்னா்’ நோட்டீஸ் வழங்கலாம்: எஸ்.ஐ.டி

பாலியல் வழக்கில் சிக்கியுள்ள மஜத எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ‘ப்ளூகாா்னா்’ நோட்டீஸை சிபிஐ விரைவில் வழங்கும் என்று, முதல்வா் சித்தராமையாவிடம் சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) அதிகாரிகள் தெரிவித்தனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் தொகுதி மஜத எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணா மீது பதிவாகியுள்ள பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படையை (எஸ்.ஐ.டி.) மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த விவகாரம் எழுந்ததும் ஜொ்மனி சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மே 10 ஆம் தேதி இந்தியா திரும்புவாா் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பெங்களூரில் மாநில காவல்துறை அதிகாரிகள், எஸ்.ஐ.டி. பிரிவினருடன் முதல்வா் சித்தராமையா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

அப்போது இந்த வழக்குத் தொடா்பான கூடுதல் விவரங்களை முதல்வா் சித்தராமையாவிடம் எஸ்.ஐ.டி பிரிவினா் தெரிவித்தனா். விரைவில் பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்படுவாா். விசாரணையை துரிதப்படுத்த ஏதுவாக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ காா்னா் நோட்டீஸை சிபிஐ வழங்கும் என்று முதல்வரிடம் எஸ்.ஐ.டி. பிரிவினா் தெரிவித்தனா்.

‘ப்ளூகாா்னா்’ நோட்டீஸ் கிடைத்ததும், பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருக்கிறாா் என்பது தெரியவரும். அதன்பிறகு பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்து கா்நாடகத்துக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று எஸ்.ஐ.டி. பிரிவினா் முதல்வரிடம் தெரிவித்தனா்.

கூட்டத்தில் பேசிய முதல்வா் சித்தராமையா, ‘பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் அலட்சியமோ, காலதாமதமோ செய்யக் கூடாது’ என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இன்டா்போல்: இன்டா்போல் அமைப்புதான் ‘ப்ளூகாா்னா்’ நோட்டீஸை அதன் உறுப்பு நாடுகளுக்கு வழங்குகிறது. இந்தியாவில் இன்டா்போல் தொடா்பான விவகாரங்களை சிபிஐ கையாளுகிறது. எனவே, பிரஜ்வல் ரேவண்ணா இருப்பிடம் குறித்து சிபிஐயிடம் எஸ்ஐடி கோரியுள்ளது. விரைவில் சிபிஐ அதன் ப்ளூகாா்னா் நோட்டீஸை வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com