டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தண்ணீர் வரவில்லை; கடன் கிடைக்கவில்லை: சம்பா நெல் சாகுபடி குறையும் அபாயம்

சென்னை, செப். 2: காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் ஆற்று நீர் சென்று சேரவில்லை; தண்ணீர் சென்ற சில பகுதிகளில் சாகுபடியைத் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:12 pm

வி.தேவதாசன்

சென்னை, செப். 2: காவிரி கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் ஆற்று நீர் சென்று சேரவில்லை; தண்ணீர் சென்ற சில பகுதிகளில் சாகுபடியைத் தொடங்க கூட்டுறவு வங்கிகளில் கடன் கிடைக்கவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

  டெல்டா மாவட்ட நெல் சாகுபடிக்காக இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் இதுவரை திருவாரூர், நாகை, கடலூர் மாவட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.

  கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல ஆறுகளில் கரைகள் உடைந்தன. பின்னர் மணல் மூட்டைகளைக் கொண்டு உடைப்புகள் தாற்காலிகமாக அடைக்கப்பட்டனவே தவிர, நிரந்தரமாக அடைக்கப்படவில்லை.

  ""வெண்ணாறு கோட்டத்தில் உள்ள பாமணி ஆறு, கோரையாறு, வெட்டாறு, அரிச்சந்திரா ஆறு உள்ளிட்ட பல ஆறுகளில் உடைப்புகள் சரிவர அடைக்கப்படாததால், இப்போது அந்த ஆறுகளில் குறைந்த அளவிலேயே தண்ணீர் விடப்படுகிறது. இதனால் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேரவில்லை'' என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோட்டூர் ஒன்றியத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

  பொதுப்பணித் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து துரைமுருகன் நீக்கப்பட்ட பிறகு, முதல்வர் கருணாநிதி அப்பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வருகிறார். தனி அமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை.

  மேலும் டெல்டா மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் பல கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் பாசனப் பகுதிகளில் நீர் நிர்வாகம் தொடர்பான பணிகளை மேற்கொள்வதில் பொதுப்பணித் துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

  கடன் கிடைக்கவில்லை: கடந்த ஆண்டு சாகுபடி செய்த பயிர்களில் பெரும்பகுதி வெள்ளத்தில் அழிந்து போனது. இதனால் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய சாகுபடி கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை. இதைக் காரணம் காட்டி புதிய சாகுபடிக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மறுத்து வருகின்றன.

  இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் சாகுபடி கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடன் வழங்கும் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. சம்பா சாகுபடியை விரைவுபடுத்தும்படி விவசாயிகளை வலியுறுத்தும் தமிழக அரசு, சாகுபடிக்கான கடனை வழங்குவதில் எவ்வித முனைப்பும் காட்டவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  பயிர்க் காப்பீடு: கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு விரைவில் காப்பீட்டு இழப்புத் தொகை கிடைக்க உள்ளது. தமிழகத்துக்கு மொத்தம் ரூ.651 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

  இதில் திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.256.45 கோடி, நாகைக்கு ரூ.177.03 கோடி, தஞ்சை மாவட்டத்துக்கு ரூ.82.58 கோடி வழங்கப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பங்குத் தொகை கிடைத்தவுடன் இம்மாத இறுதிக்குள் அத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என வேளாண் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  இது குறித்து காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் கூறியதாவது:

  பயிர்க் காப்பீடு நிச்சயம் கிடைக்கப் போகிறது என்பது தமிழக அரசுக்கு நன்றாகவே தெரியும். எனவே சம்பா சாகுபடியை தொடங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் புதிய கடன் தொகையை இப்போதே வழங்க வேண்டும். பயிர் காப்பீடு தொகை கிடைத்தவுடன், அந்த தொகையை கடந்த ஆண்டு கடனில் வரவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் கடன் வழங்க எந்த நடவடிக்கையும் இல்லாததால், சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை என்றார்.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:

  முன்பெல்லாம் மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்பட்ட நாளிலேயே விவசாயிகள் சாகுபடி பணிகளைத் தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டு ஒரு மாதமாகியும் விவசாயிகள் சோர்ந்து போய் உள்ளனர். தமிழக அரசு விவசாயிகளின் பிரச்னையை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக கடன் வழங்க முன்வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.