மயூர் விஹாரில் விநாயகர் சிலை அருங்காட்சியகம்?
குழந்தைகள் விரும்பும் இரு தெய்வங்கள் ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ கிருஷ்ணரும்தான். அவர்கள் இருவரும் குறும்பு செய்பவர்கள் என்பதே அவ்விருப்பத்துக்குக் காரணம். ஆதி முதல்வனாகப் போற்றப்படும் விநாயகர் எல்லாரும் வி


குழந்தைகள் விரும்பும் இரு தெய்வங்கள் ஸ்ரீ விநாயகரும், ஸ்ரீ கிருஷ்ணரும்தான். அவர்கள் இருவரும் குறும்பு செய்பவர்கள் என்பதே அவ்விருப்பத்துக்குக் காரணம். ஆதி முதல்வனாகப் போற்றப்படும் விநாயகர் எல்லாரும் விரும்பும் தெய்வம்.
யானை முகத்துடன், ஐந்து கரத்துடன், உந்திய வயிறுடன், ஒடிந்த தந்தத்துடன் காட்சி தரும் விநாயகரைப் பலவித வடிவங்களில் வடித்து அழகு பார்த்து, அதன் மூலம் ஆனந்தக் கடலில் நீந்துவோர் பலர் உண்டு.
பலவகைப் பொருள்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடும் பக்தர்களும் உண்டு. ஆனால், தன்னுடைய வீடு முழுவதும் விநாயகர் சிலைகளை வைத்து நிரப்பிய பிறகும் அப்பெருமானின் திருவுருவம் வைக்க இடம் தேடும் நபரைப் பார்த்தது உண்டா?
இக் கேள்விக்குப் பதிலாக இருக்கிறார் மயூர் விஹார் ஃபேஸ் 3 எஸ்.ஃஎப்.எஸ். குடியிருப்பில் வசிக்கும் எம். ராமச்சந்திரன்.
எந்த உருவத்தில், எவ்வாறெல்லாம் பிள்ளையார் சிலையை வடித்தெடுக்க முடியும் என்று கற்பனை செய்ய முடியாத அளவில் நூற்றுக்கணக்கான விநாயகர் திருவுருவங்களை விதவிதமான வடிவங்களில் தன் இல்லத்தில் வைத்து அழகு பார்த்து வருகிறார் இந்த விநாயகர் பக்தர்.
இவரது வீட்டில் எங்கு பார்த்தாலும் விநாயகர் சிலைகள் சுவர்களிலும், அலமாரியிலும், அடுக்கி வைக்கப்பட்டிருப்பதால், இது குடியிருக்கும் வீடா, விநாயகர் சிலைகளின் அருங்காட்சியகமா என்று வியப்பில் ஆழ்த்துவதாக உள்ளது.வீட்டின் வரவேற்பறை தொடங்கி பூஜை அறை முதல் அனைத்து இடங்களிலும் அரிசி அளவு முதல் 2 அடி வரை பல்வேறு அலோகம், உலோகத்தால் வடிக்கப்பட்ட கண்கவர் விநாயகர் சிலைகள் காணப்படுகின்றன.
எச்.டி.ஃஎப்.சி. வங்கியின் பிராந்தியப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வரும் எம். ராமச்சந்திரனுக்கு, விநாயகர் சிலைகள் மீது அப்படி என்ன ஈர்ப்பு?
""கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து விநாயகர் சிலைகளைச் சேகரித்து வருகிறேன். விநாயகரை வழிபடும் பழக்கம் எனக்கு சிறு வயதில் இருந்தே உண்டு. ஆனால், சிலைகள் சேகரிக்கும் எண்ணம் எதேச்சையாகத்தான் தோன்றியது. தொடக்கத்தில் என்னிடம் வெண்கலம், மரத்தால் ஆன விநாயகர் சிலைகள் மட்டுமே இருந்தன. ஆர்வம் காரணமாக விநாயகர் சிலைகள் சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
எனது அலுவலகப் பணி தொடர்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு இருந்ததால், அங்கெல்லாம் விநாயகர் சிலைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினேன்.
தற்போது பலவித வடிவங்களில் சுமார் 1,500 விநாயகர் சிலைகள் வரை சேகரித்துள்ளேன். எனது ஆர்வத்தை அறிந்து நண்பர்கள், உறவினர்களும் விநாயகர் சிலைகளைத் தருகின்றனர்.
தங்கம், வெள்ளி, வெண்கலம், மரம், இரும்பு, பித்தளை, ஸ்படிகம், அரிசி என பலவித பொருள்களால் ஆன விநாயகர் சிலைகளைச் சேகரித்து வைத்துள்ளேன். இச் சிலைகளை வீட்டில் அலங்கரித்து வைப்பதற்கும், சிலை வைக்க உரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும் எனது மனைவி மகேஸ்வரி எனக்கு உதவி செய்கிறார்.
விநாயகர் சிலைகளைப் வாங்குவதற்கு பணத்தை நான் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. எனது குடும்பத்தினரும் விநாயகர் மீது காதல் கொண்டுவிட்டனர். இதனால், அவ்வப்போது புதிய, புதிய அவதாரங்களில் சிலைகளாக எங்கள் இல்லத்துக்கு விநாயகர் விஜயம் செய்கிறார். இதைவிட வேறு மகிழ்ச்சி என்ன வேண்டும்?
என்னால் இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிலைகளையும், விநாயகர் உருவம் பதித்த ஓவியங்களையும் வாங்க உள்ளேன். இச்சிலைகளை வைக்க என் வீட்டில் இடம் போதவில்லை என்று நான் நினைக்கவில்லை. அவர் அதற்கு இடம் ஏற்படுத்தித் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு'' என்று கண்கள் பனிக்க கூறுகிறார் ராமச்சந்திரன்.இவரது வீட்டில் காய்கறி விநாயகர், சூரிய விநாயகர், விளக்கு விநாயகர், அக்ரூட் விநாயகர், ஸ்படிக விநாயகர், மரச்சிற்ப விநாயகர், கட்டிலில் அமர்ந்திருக்கும் பிள்ளையார், வீணை மீட்டும் விநாயகர், பாலகன் விநாயகர் என விதவிதமான விநாயகர் சிலைகள் காண்போரை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
திபெத்தைச் சேர்ந்த டிராகன் பிள்ளையார், கொட்டைப் பாக்குப் பிள்ளையார், சங்குப் பிள்ளையார், மியூசிக்கல் சேர் பிள்ளையார், தாமரையில் அமர்ந்திருக்கும் பிள்ளையார், அசாம் மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட மூங்கில் வேரால் உருவான பிள்ளையார், 32 முக விளக்கு பிள்ளையார் போன்ற விசித்திர பிள்ளையார்களும் காணப்படுகின்றன. இவை தவிர, பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட விநாயகர் உருவம் தாங்கிய தபால் தலைகள், ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றையும் சேகரித்து வைத்துள்ளார் இவர்.
பிள்ளையார் சேகரிப்பு தவிர, இரு தலைமுறைக்கு முந்தைய உலோகத்தால் ஆன பாக்கு வெட்டி, 50 ஆண்டுகளுக்கு முந்தைய ரேடியோ, கிராமபோன், டெலிபோன், கூஜா, கடிகாரம், வெற்றிலைப் பெட்டி என பழம் பொருள்களையும் பாதுகாத்து வருகிறார் ராமச்சந்திரன். ""வரும் தலைமுறையினருக்கு நமது பழமை, பாரம்பரியம் பற்றிய விஷயங்கள் தெரிய வேண்டும். அதற்கு இது போன்ற சேகரிப்புகள் உதவும் என்று நம்புகிறேன்'' என்கிறார்.
மயூர் விஹார் ஃபேஸ் 3-ல் உள்ள ஸ்ரீ இஷ்டசித்தி விநாயகர் கோயிலை விரிவுபடுத்தும் பணியின்போதும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் ராமச்சந்திரன்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது ராமச்சந்திரன் விநாயகர் நேசர் மட்டும் அல்ல; ஒரு தாசர் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...