20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 20 இரண்டடுக்கு பேருந்துகள் வாங்க விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.
Published on

சென்னை: சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 20 இரண்டடுக்கு பேருந்துகள் வாங்க விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அடுக்கு பேருந்து சேவையை மீண்டும் அறிமுகம் செய்ய மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான வழித்தடத்தில் இரண்டு அடுக்கு பேருந்து சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்த, முதல்கட்டமாக 20 பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம், மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சார சொகுசு பேருந்துகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து மின்சார இரண்டு அடுக்கு பேருந்து கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதியைப் பெற்ற விரைவில் 20 இரண்டு அடுக்கு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com