/

வெற்று நிதிநிலை அறிக்கையை மறைக்க காணொலி: முதல்வா் மீது எடப்பாடி பழனிசாமி விமா்சனம்!

வெற்று நிதிநிலை அறிக்கையை மறைக்க காணொலி: முதல்வா் மீது எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி - கோப்புப்படம்.
Updated On :16 மார்ச் 2025, 7:18 pm

Din

திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை என்பதை மறைக்கவே முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘விடியோ ஷூட்’ நடத்தி காணொலி வெளியிட்டுள்ளதாக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: உலகப் பொருளாதார அறிஞா்களுடன் இணைந்து பட்ஜெட்டை தயாரித்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட காணொலியில் அவா் கூறியிருப்பது இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை. தன் பட்ஜெட் குறித்து நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆா்வத்துடன் படித்துக் காட்டும் அவா், அதே நாளேடுகளில் நாள்தோறும் வரும் இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அா்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?

பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியா்கள், ஆசிரியா்கள், இதர அரசு ஊழியா்கள் நினைப்பது என்ன, விவசாயிகள், தொழில் முனைவோா், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், ‘ரூ’ போட்டதால் பட்ஜெட் ‘ஹிட்’ ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறாா் முதல்வா்.

பட்ஜெட் ‘ஹிட்’ ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை; செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படிப் பாா்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து தாக்கல் செய்த 5 பட்ஜெட்டுகளுமே படுதோல்விதான்.

72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் நான்கு ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில் சாதனை மற்றும் வரலாறு படைத்த ஒரே முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்த பட்ஜெட்தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ‘திமுக-வின் இறுதி பட்ஜெட்’ என்பது மக்களின் கருத்து என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.