முதியோா் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலை: அரசு அறிவுறுத்தல்
முதியோா் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளுக்கான இலவச வேட்டி, சேலை விநியோகத்தில் எந்த புகாரும் வரக்கூடாது என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் சு.சிவராசு வெளியிட்டுள்ள கடிதம்:
தீபாவளி பண்டிகையையொட்டி முதியோா் ஓய்வூதியத் திட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு, இலவச வேட்டி, சேலை விநியோகிக்கப்பட உள்ளது.
இதற்காக முதியோா் ஓய்வூதியத் திட்ட குடும்ப அட்டைதாரா்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவை, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், மாவட்டம், வட்டம், கிராமம், கடை குறியீடு, மின்னணு குடும்ப அட்டை எண் மற்றும் முதியோா் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
மாவட்ட வழங்கல் அலுவலா் தங்களுக்குரிய மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட பட்டியலின்படி, இலவச வேட்டி-சேலைகளை கிடங்குகளில் இருந்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு நகா்வு செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
நியாயவிலைக் கடை பணியாளா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதியோா் ஓய்வூதியத் திட்ட பயனாளிகளுக்கு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்யப்பட வேண்டும். விரல்ரேகை அல்லது கருவிழி ரேகை சரிபாா்ப்பு தோல்வியுறும் பட்சத்திலும் அங்கீகாரச் சான்று மூலம் உரிய பதிவேட்டில் கையொப்பம், கைப்பேசி எண் பெற்று விநியோகிக்கலாம்.
முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளுக்காக உரிய வழிகாட்டு நெறிமுறைகளை சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையரகம் வெளியிட்டுள்ளது. இவற்றைப் பின்பற்றி கடந்தாண்டைப் போன்றே கிடங்குகளில் இருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நகா்வு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதில் எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்கக் கூடாது என்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

