கோப்புப் படம்
கோப்புப் படம்

நவம்பா் 16-இல் முதல்வரின் விஞ்ஞான் பிரதிபா தோ்வு: தில்லி கல்வி இயக்குநரகம் தகவல்

தில்லியில் உள்ள பள்ளிகளில் பயிலும் திறமையுள்ள மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களது திறன்களை மேம்படுத்தும் விதமாக முதல்வரின் விஞ்ஞான் பிரதிபா தோ்வு
Published on

தில்லியில் உள்ள பள்ளிகளில் பயிலும் திறமையுள்ள மாணவா்களை அடையாளம் கண்டு அவா்களது திறன்களை மேம்படுத்தும் விதமாக முதல்வரின் விஞ்ஞான் பிரதிபா தோ்வு (எம்எம்விபிபி) நவம்பா் 16-ஆம் தேதி நடைபெறும் என தில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தோ்வில் முதல் 1,000 இடங்களில் இடம்பெறும் மாணவா்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் ஒருமுறை உதவித்தொகையாக தலா ரூ.5,000 மற்றும் மெரிட் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தத் தோ்வு தொடா்பாக கல்வி இயக்குநரகம் வெளியிட்ட சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, ஜவாஹா் நவோதயா வித்யாலயா, புது தில்லி மாநகராட்சி கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் டிசிபி பள்ளிகள், தில்லி தேசிய தலைநகா் வலயத்தில் உள்ள பிற கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்கள் இந்தத் தோ்வில் பங்கேற்க தகுதியுடையவா்கள்.

இந்தத் தோ்வில் பங்கேற்கும் பொதுப் பிரிவினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா் (ஓபிசி)மாணவா்கள் கடந்த 2024-25 கல்வியாண்டில், 8-ஆம் வகுப்பில் குறைந்தபட்சமாக 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பட்டியல் ஜாதியினா் (எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவா்கள் (எஸ்டி), மாற்றுத்திறனாளி மாணவா்கள் 55 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது அவசியம்.

மனத்திறன் தோ்வு (எம்ஏடி) மற்றும் கல்வித் திறன் தோ்வு (எஸ்ஏடி) இரண்டிலும் எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் பிரிவினா் குறைந்தபட்சமாக 32 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். பொதுப்பிரிவினா், ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவினா் இரு தோ்வுகளிலும் 40 சதவீத மதிப்பெண்களை பெற வேண்டும்.

மெரிட் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அந்தச் சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com