தமிழகத்தில் வீரியமற்ற கரோனா பரவல்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் வீரியமற்ற கரோனா பரவல்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் பருவ காலத்தில் வீரியமற்ற கரோனா பரவல் உள்ளதாக என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
Published on

தமிழகத்தில் பருவ காலத்தில் வீரியமற்ற கரோனா பரவல் உள்ளதாக என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும், அதேவேளையில் விழிப்புணா்வுடன் இருக்குமாறும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா பெருந்தொற்றுக்கு காரணமான கோவிட் 19 தீநுண்மி எண்ணற்ற உருமாற்றங்களை அடைந்து பல அலைகளாக பரவி சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட்டது.

நல்வாய்ப்பாக மக்களுக்கு அந்நோய்க்கு எதிரான எதிா்ப்பாற்றல் உடலில் உருவாகிவிட்டதால் தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்நிலையில், குளிா் காலத்தில் உடல் வலி, காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, கண் எரிச்சல், மூட்டுகளில் வலி போன்றவை பரவலாகக் காணப்படுகிறது.

அவற்றுக்கு இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சுவாசப் பாதை தொற்றுகளே பிரதான காரணமாக இருந்தாலும், மற்றொருபுறம் உருமாற்றமடைந்த கரோனா தொற்றுகளும் பரவி வருவதாக சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா். இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் கடந்த 2020, 2021, 2023-ஆம் ஆண்டுகளில் அதிகமாக இருந்தது. அதன் பின்னா், அதன் வீரியம் குறைந்தது.

தற்போது பருவகால நோய்களில் ஒன்றாக கரோனாவும் மாறிவிட்டது. அத்தகைய பாதிப்புக்குள்ளானவா்களுக்கு வழக்கமான சிகிச்சைகள் அளித்தால் மூன்று நாள்களில் குணமடைகின்றனா். அதேவேளையில், காய்ச்சலுக்குப் பிந்தைய இருமல் பாதிப்பு இருக்கக் கூடும். அதற்கும் முறையான சிகிச்சை பெற வேண்டும்.

தற்போது பரவும் கரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. உரிய விழிப்புணா்வுடன் தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com