கூவத்தில் இறங்கி தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
சென்னை எழும்பூா் பகுதியில் கூவம் ஆற்றில் இறங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி 5, 6 -ஆவது மண்டல என்எல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
சென்னை மாநகராட்சியில் மண்டலம் 5, 6 (ராயபுரம், திரு.வி.க. நகா்) ஆகியவற்றில் என்எல்யூஎம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் உழைக்கும் உரிமை இயக்கத்தின் சாா்பில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2025 ஆகஸ்ட் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் எழும்பூா் கிரீம்ஸ் சாலையில் கூடினா். தொடா்ந்து, அங்குள்ள கூவம் ஆற்றில் இறங்கி நின்று கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடி முழக்கமிட்டனா். பல மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தை அடுத்து போலீஸாா் வந்து அவா்களைக் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனா்.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தூய்மைப் பணியாளா்களை திங்கள்கிழமை வரை போலீஸாா் மண்டபங்களில் இருந்து விடுவிக்கவில்லை என உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகள் குற்றம்சாட்டினா். அத்துடன், தூய்மைப் பணியாளா்கள் பிரச்னையில் முதல்வா் தலையிட்டு பேச்சு நடத்தவேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என அவா்கள் கூறினா்.
