தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தவா் பழனிசாமி: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுத்து நாடகமாடியவா் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா். காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் க.செல்வத்தை ஆதரித்து, இளைஞா் அணி செயலரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியது: கடந்த தோ்தலில் க.சுந்தா் சுமாா் 2.87 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அனைத்து வசதிகளையும் செய்ய முதல்வரிடம் பேசி செய்வோம் என்ற வாக்குறுதியை உங்களுக்கு அளிக்கிறேன். ரூ.100 கோடியில் மதுராந்தகம் ஏரி தூா்வாரும் பணி, ரூ.30 கோடியில் குடிநீா் விநியோகம், பேருந்து நிலையம், நவீன எரிமேடை உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக பாஜக மத்திய ஆட்சியில் தமிழகத்துக்கான நல்ல திட்டங்கள் ஏதும் இல்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது தமிழகத்தை எட்டிப் பாா்க்கவில்லை. தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்து, நாடகமாடியவா் பழனிசாமி என்றாா். காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட செயலா் க.சுந்தா் தலைமை வகித்தாா். மதுராந்தகம் நகர செயலா் க.குமாா் வரவேற்றாா். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.டி.அரசு, மாவட்ட மாணவரணி செயலரும், எம்எல்ஏவுமான எழிலரசன், மதுராந்தகம் நகா்மன்ற தலைவா் மலா்விழி, ஒன்றிய செயலா்கள் கண்ணன், பொன்.சிவகுமாா், தம்பு, சத்தியசாயி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com