
ஆவடி மாநகராட்சிப் பகுதியில் இதுவரை நீதிமன்றம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் வெளியூர்களுக்குச் சென்று வர வேண்டிய நிலையைத் தடுக்க நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது.
ஆவடி மாநகரம், வட்டம் பகுதி மக்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைகளுக்காக திருவள்ளூர், பூந்தமல்லி, அம்பத்தூர் நீதிமன்றங்களுக்கு சென்று வரவேண்டியுள்ளது. இந்த 3 ஊர்களுக்கு சென்று வருவதால் நேரம், பண விரயம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தில் ஆவடி, பட்டாபிராம் காவல் சரகங்கள் அமைந்துள்ளன. ஆவடி சரகத்தில் ஆவடி, திருமுல்லைவாயல், ஆவடி பீரங்கி தொழிற்சாலை ஆகிய காவல் நிலையங்களும், பட்டாபிராம் சரகத்தில் பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, திருநின்றவூர் ஆகிய காவல் நிலையங்களும் உள்ளன. மேலும் ஆவடி பகுதியில் ஆவடி ரெயில்வே காவல் நிலையமும், அண்ணனூர் ரெயில்வே பாதுகாப்பு படையும், ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையமும் உள்ளன.
ஆவடி சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம், ரெயில்வே காவல் நிலையம், அண்ணனூர் ரெயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றில் நடக்கும் குற்ற வழக்குகள் பூந்தமல்லி நீதிமன்றத்திலும், திருநின்றவூர், பட்டாபிராம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள பகுதிகளில் திருவள்ளூர் நீதிமன்றத்திலும், திருமுல்லைவாயல், முத்தாபுதுப்பேட்டை, ஆவடி பீரங்கி தொழிற்சாலை ஆகிய காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் அம்பத்தூர் நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படுகின்றன.
இது குறித்து பொதுமக்கள் கூறியது: ஆவடி, பட்டாபிராம் சரகப் பகுதியைச் போலீஸார், பொதுமக்கள், வழக்குரைஞர்கள் நீதிமன்ற விசாரணைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி, அம்பத்தூர் நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
ஆவடியில் இருந்து 10கி.மீ தொலைவில் பூந்தமல்லி நீதிமன்றமும், பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் பகுதியில் இருந்து முறையே 20கி.மீ, 15கி.மீ தொலைவில் திருவள்ளூர் நீதிமன்றமும், முத்தாபுதுப்பேட்டை மற்றும் ஆவடி பீரங்கி தொழிற்சாலை பகுதியில் இருந்து 15கி.மீ, 10கி.மீ, தொலைவில் அம்பத்தூர் நீதிமன்றமும் உள்ளன.
மேலும், பட்டாபிராம், திருநின்றவூர் காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் குற்ற வழக்குகளுக்கு திருவள்ளூருக்கும், சிவில் வழக்குகளுக்கு பூந்தமல்லிக்கும் செல்ல வேண்டியது உள்ளது. மேற்கண்ட 3 நீதிமன்றங்களுக்கு பொதுமக்கள், வழக்குரைஞர்கள் செல்ல கால தாமதமும், பண விரையமும் ஏற்படுகிறது. மேலும், போலீஸார் குற்றவாளிகளை அழைத்துக் கொண்டு நீண்ட தூரம் செல்ல வேண்டியது உள்ளது.
எனவே, ஆவடி, பட்டாபிராம் சரகக் காவல் பகுதிகளுக்கு ஆவடியின் மையப் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைத்தால் பொதுமக்கள் பல கி.மீ தொலைவு அலைவதை தவிர்க்கலாம். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து அரசு வழக்குரைஞர் ஒருவர் கூறியது, ஆவடி வட்டம் உள்ளிட்ட பகுதிகள் வருவாய் துறை அடிப்படையில் பிரிக்கப்பட்டு, கடந்த 8 ஆண்டுகள் நிர்வாகம் மட்டுமே நடக்கிறது.
ஆனால், நீதித்துறை அதிகாரம் அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய நீதிமன்றங்களில் தான் உள்ளது. இதனை பிரித்து ஆவடி வட்டத்திற்கு அதிகாரத்தை கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஆவடி வட்டத்தில் நீதிமன்றத்தை அமைக்க முடியும் என்றார்.