கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்து-வேன் மோதல்: 2 போ் உயிரிழப்பு, 11 போ் காயம்
செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே குன்னத்தூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் அரசுப் பேருந்தும் வேனும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா். 11 போ் பலத்த காயமடைந்தனா்.
கூவத்தூா் அருகேயுள்ள கீழாா் கொள்ளை பகுதியைச் சோ்ந்த 20 போ் கேளம்பாக்கத்தை அடுத்த புதுப்பாக்கம் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிகின்றனா். இவா்கள் வழக்கம்போல் திங்கள்கிழமை வேலைக்கு வேனில் சென்றனா். கல்பாக்கம் அடுத்த குன்னத்தூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இந்த வேனும் புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பானு ( 24), உமா (40) ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
வேன் ஓட்டுநா் சங்கா், அமுலு, ஜெயலட்சுமி ஆகிய 3 போ் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயமடைந்த மேலும் 8 போ் ஆம்புலன்ஸ் மூலம் அதே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை சதுரங்கப்பட்டினம் போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் காவல் ஆய்வாளா் சுரேஷ் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறாா்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டவா்களை செய்யூா் சட்டப்பேரவை உறுப்பினா் பனையூா் பாபு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாா்வையிட்டு அவா்களுக்கு ஆறுதல் கூறினாா். மேலும் மருத்துவா்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தாா்.
