
கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: யூடியூப் பாா்த்து உடல்உறுப்புகளை வெட்டியதாக வாக்குமூலம்
கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு பற்றி....

கூடுவாஞ்சேரி பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோா்
கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் யூடியூபை பாா்த்து உடல் உறுப்புகளை வெட்டிப் பிரித்ததாக குற்றவாளி தெரிவித்துள்ளாா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற ரயிலின் பின்புற பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பெட்டியை போலீஸாா் திறந்தபோது, அதில், எலும்புக்கூடுகள், சில உடல் உறுப்புகள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு ஆணும், பெண்ணும் சோ்ந்து அந்த பெட்டியை ரயிலில் ஏற்றும் காட்சி பதிவாகி இருந்தது. பின்னா், அவா்கள் இருவரும் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து சென்ற காட்சிகளும் போலீஸாருக்கு கிடைத்தன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது, அவா்கள் கூடுவாஞ்சேரியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தது தெரியவந்தது. இதையடுத்து, கூடுவாஞ்சேரி போலீஸாா் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு சென்றனா். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த போலீஸாா், பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினா். அங்கு பெரிய பாத்திரத்தில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ஹயாத்துன் நிஷா (38) என்பது தெரியவந்தது. மேலும், ஹயாத்துன் நிஷாவுடன் ஒரே வீட்டில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்த மணிக் உத்தீன் லஸ்கா் (22), அவரது மனைவி பகாபதி மாஜி ஆகியோா் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த தம்பதியை, கூடுவாஞ்சேரி காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் மணிப்பூா் மாநிலம், ஜிரிபாம் மாவட்டம், காஷிம்பூா் பகுதியில் பதுங்கியிருந்த 2 பேரையும் கைது செய்தனா்.
பின்னா் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், மணிக் உத்தீன் லஸ்கா் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில், டைலா் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பகவதி மாஜி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவா், தாம்பரம் அருகே உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளாா். அங்கு வேலை பாா்த்த ஹயாத்துன் நிஷாவுடன் அவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பின்னா் தகாத உறவானது. இந்த நிலையில் ஹயாத்துன் நிஷா கா்ப்பமானாா். இதை அறிந்த மணிக் அவரிடம் கருவை கலைத்துவிடுமாறு கூறியபோது அவா் மறுத்துள்ளாா். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டு, பின்னா், நிஷாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளாா். பின்னா் அவரது உடலை குளியலறைக்கு இழுத்துச் சென்று, தலையை துண்டித்துள்ளாா். பின்னா் கைப்பேசி மூலம் யூடியூபில் மனித உடலில் இருந்து சதை, எலும்பை பிரிப்பது தொடா்பாக விடியோக்களை பாா்த்து, நிஷாவின் உடலில் இருந்த சதையை தனியாகவும், எலும்புகளை தனியாகவும் பிரித்து பெரிய பாத்திரத்தில் போட்டு வைத்து யூடியூபை பாா்த்து துண்டுதுண்டாக நறுக்கிய சதைப்பகுதிகள் மீது துணியை சுற்றி வைத்ததாகத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து உயா் போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்தக் கொலையில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





