தமிழர்களை வஞ்சிக்கும் அரசு நிறுவனம்
சென்னை, ஜூன் 20: தமிழக அரசு நிறுவனம் வேலைக்கு அனுப்பிய தொழிலாளர்கள் சம்பளம், உணவு ஏதுமில்லாமல் மஸ்கட்டில் மாட்டிக் கொண்டு ஊர் திரும்ப வழியில்லாமல் தவித்து வருகின்றனர் என்று தெரியவருகிறது. ஏமாற்றப்


சென்னை, ஜூன் 20: தமிழக அரசு நிறுவனம் வேலைக்கு அனுப்பிய தொழிலாளர்கள் சம்பளம், உணவு ஏதுமில்லாமல் மஸ்கட்டில் மாட்டிக் கொண்டு ஊர் திரும்ப வழியில்லாமல் தவித்து வருகின்றனர் என்று தெரியவருகிறது.
ஏமாற்றப்பட்ட தாங்கள் அரசு நிறுவனத்தை அணுகி நியாயம் கேட்டால், அதிகாரிகளால் மிரட்டப்படுவதாக அத்தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வெளி நாடுகளில் கட்டடத் தொழில் உள்ளிட்ட பல்வேறு உடல் உழைப்புத் தொழில்களுக்கு தேவைப்படும் தொழிலாளர்களை அனுப்புகிறது அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்.
தனியார் நிறுவனங்களும் இந்தப் பணியைச் செய்கின்றன. அரசு நிறுவனம் என்பதால், ஆயிரக்கணக்கானோர் இதை நம்பி வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர்களை அனுப்பும் விஷயத்தில் அந்த நிறுவனம் கண்மூடித்தனமான அணுகுமுறையைப் பின்பற்றி வருவதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேரடி சாட்சியம்... அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் அனுப்பப்பட்டு பெரும் சித்திரவதையை அனுபவித்து இப்போது சென்னை திரும்பியுள்ளனர் இரண்டு தமிழர்கள்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் கமலதாசன், கனகராஜு. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வளைகுடா நாடான மஸ்கட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு, கட்டடப் பணிக்காகச் சென்ற அவர்களிடம் சேவைக் கட்டணம், பணிக் கட்டணம் என மொத்தம் ரூ. 12 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது. வளைகுடா நாட்டுக்குச் சென்றதுமே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
""நாங்கள் அங்கு போய் இறங்கியதும், எங்களிடம் ரூ. 10 ஆயிரம் வேண்டும் எனக் கேட்டனர். "விசா'வுக்காக இந்தப் பணம் என்றும், இல்லை என்றால் சம்பளத்தில் மாதம் மாதம் பிடித்துக் கொள்வதாக சம்பந்தப்பட்ட கட்டட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அங்கு எங்களுக்கு மாதச் சம்பளமாக ரூ. 14 ஆயிரம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்தப் பணம் முழுவதும் வழங்கப்படவில்லை. மாதம் ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே கொடுத்தார்கள். ஒவ்வொரு மாதமும் சம்பளம் வித்தியாசமாக அளிக்கப்பட்டது'' என்றார் கொத்தனார் வேலைக்குச் சென்ற கமலதாசன்.
கல் சுமக்க வைத்தனர்: கட்டடப் பணி உதவியாளராகச் சென்ற கனகராஜு தானும், தன்னுடைய சகாக்களும் அனுபவித்த சித்ரவதையைக் கூறினார்.
""என்னை கல் சுமக்க வைத்தனர். ஒரு கட்டத்தில் என்னுடைய இடது கை செயலிழந்தது. ஆனால், ஒரு கையை வைத்துக் கொண்டு பணியாற்றச் சொன்னார்கள். மருத்துவச் செலவுக்கு பணமோ, விடுமுறையோ அளிக்கவில்லை. பணியின் போது உயரமான கட்டடத்தில் இருந்து ஒரு தமிழர் விழுந்து இறந்தார்.
அவரது உடலை அனுப்பி வைக்கவில்லை. அங்கேயே உடல் நாறி மக்கிப் போனது. அங்கு உயர் பதவியில் இருக்கும் தமிழக அதிகாரிகளே, தமிழகத் தொழிலாளர்களுக்கு விரோதிகளாக இருக்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் சித்திரவதைகளுக்கு துணை நிற்கின்றனர்'' என்றார்.
அனுப்பி வைப்பதோடு சரி... வெளிநாடுகளில் சித்ரவதை செய்யும், தொழில் நிறுவனங்கள் குறித்துப் புகார் தெரிவித்தாலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கண்டுகொள்வதில்லை என குற்றம்சாட்டுகின்றனர் தொழிலாளர்கள்.
""நாங்கள் வெளிநாடு செல்வதற்கு முன்பாக, சென்னை அடையாறில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் பல்வேறு பெயர்களில் கட்டணம் வசூக்கிறது. அதில், காப்பீட்டுக் கட்டணம், சேவை வரி என பல்வேறு பெயர்களில் மொத்தம் ரூ. 12 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
மேலும், வெளிநாடுகளில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தொடர்பு கொள்ள தொலைபேசி எண் (044-2446 4267) கொடுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் எங்களுக்குப் பிரச்னை ஏற்படும்போது, அந்த எண்ணும் பிரச்னையாகவே இருக்கிறது.
அதில், தொடர்பு கொள்ள முடிவதில்லை. நேரில் எங்கள் உறவினர்கள் வந்து கேட்டால் அவர்களை அதிகாரிகளும், அலுவலர்களும் மிரட்டி அனுப்பி வைக்கின்றனர்.
தமிழர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதற்கு பதிலாக, அவர்களை வஞ்சிக்கும் பணியில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது'' என்கின்றனர் கமலதாசனுடன் வந்த தமிழர்கள்.
மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்னைப் போன்று மஸ்கட்டில் மாட்டிக் கொண்ட தமிழர்கள் 30-க்கும் மேல் இருப்பார்கள் என்கிறார் கனகராஜு.
""அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊதியத்தை சரியாக வழங்கக் கூடிய, நியாயமான நிறுவனங்களுக்கு மட்டுமே தொழிலாளர்களை அனுப்பி வைக்க வேண்டும். பிரச்னை ஏற்படும்போது, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள தூதரகத்தை அணுகிறோம்.
அங்கு உரிய முறையில் பதில் கிடைப்பதில்லை. அதற்குப் பதிலாக, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தொழிலாளர்களின் புகார்களைத் தீர்க்க தனி அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழர்களை வஞ்சிக்க அரசு நிறுவனமே துணை போகக் கூடாது'' என்கின்றனர் தொழிலாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...