அஞ்சலக உதவியாளர் பணியிடம்: கூடாது கோட்ட வாரியான தேர்வு...

சென்னை, அக். 8அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு கோட்ட வாரியாக நடத்தப்படும் தேர்வு, முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தகவல் அறிந்த வட்டாரத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.   தபால் அலுவலக கோட்ட அதிகாரிகள் மூலம் த
அஞ்சலக உதவியாளர் பணியிடம்: கூடாது கோட்ட வாரியான தேர்வு...

சென்னை, அக். 8அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு கோட்ட வாரியாக நடத்தப்படும் தேர்வு, முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தகவல் அறிந்த வட்டாரத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

  தபால் அலுவலக கோட்ட அதிகாரிகள் மூலம் தேர்வை நடத்தாமல், பொதுவான அமைப்புகள் வழியாக நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

  தமிழக தபால் துறை வட்டம் 42 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6 கோட்டங்கள் உள்ளன.

  இந்தக் கோட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் முக்கிய பணிகளை அஞ்சலக உதவியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், 2006 - 2007 மற்றும் 2007 - 2008-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை.

  கல்வித் தகுதி பிளஸ் டூ...  இந்தத் தேர்வுக்கு கல்வித் தகுதி பிளஸ் டூ மட்டுமே. ஆனால், கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது சர்வசாதாரணமாகி விட்ட சூழலில், அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு மட்டும் ஏன் "பிளஸ் டூ' கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தபால் துறையில் பணியாற்றுவோரே கேள்வி எழுப்புகின்றனர்.

  ""அடிப்படைச் சம்பளம் ரூ. 9 ஆயிரம், பல்வேறு சலுகைகள் என மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வரை அஞ்சலக உதவியாளர்களுக்குக் கிடைக்கிறது. இந்தப் பணி மிகவும் பொறுப்புள்ளது. கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை கையாள அதிக கல்வித் தகுதி அவசியம். ஆனால், தேர்வு எழுத "பிளஸ் டூ' போதும் எனக் கூறுகின்றனர். சி.பி.எஸ்.சி. கல்வி முறையில் படித்த மாணவர்களை தேர்வு எழுத அழைப்பதில்லை'' என்று தபால் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  திடீர் தேர்வு ஏன்?  கடந்த இரண்டு ஆண்டுகளாக அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்படவில்லை. தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக இந்தத் தாமதம் நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ஆனால், இப்போது 2006 முதல் 2008 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 569 இடங்களுக்கு திடீரென தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

  ""தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15 கடைசி நாள். பல தபால் அலுவலகங்களில் விண்ணப்பம் இருப்பு இல்லை. இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தே விண்ணப்பத்தைத் தருகின்றனர். ஒவ்வொரு கோட்டத்துக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். திருநெல்வேலியில் உள்ள ஒருவர் தென் சென்னை கோட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர் சென்னையில் வந்து தேர்வு எழுத வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள 42 அஞ்சலகக் கோட்டங்களிலும் ஒரே கேள்வித்தாள் கொடுக்கப்படும். கோட்டங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்வை நடத்துகிறார்கள். கோட்ட வாரியாக தேர்வை நடத்தாமல் பொதுவான முறையில் அதாவது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் மூலம் தேர்வை நடத்த வேண்டும்'' என்று அந்தத் தேர்வை எழுதுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இவ்வாறு செய்வதன் மூலம், அஞ்சலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வை எந்த முறைகேடும் இன்றி நடத்தலாம்.

  இப்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறை தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு சாதகமாக இருப்பதாக அந்தத் துறையைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com