மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சந்தியா பதிப்பகத்தின் வெளியீடு: "ரத்தம் விற்பவனின் சரித்திரம்'

1994-ஆம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் கவனத்தைக் ஈர்த்த யூ ஹூவாவின் "கிரானிக்கல் ஆஃப்

News image
Updated On :9 ஜனவரி 2015, 10:05 pm

மபா

1994-ஆம் ஆண்டு வெளிவந்து உலக அளவில் கவனத்தைக் ஈர்த்த யூ ஹூவாவின் "கிரானிக்கல் ஆஃப் ஏ பிளட் மெர்ச்சண்ட்' என்ற நாவல்தான் தற்போது ரத்தம் விற்பவனின் சரித்திரமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சீனாவின் மையப் பகுதியில் கதை நிகழ்கிறது.  இதுவரை திறக்கப்படாத சீன கம்யூனிச கதவுகளைத் திறந்து, நமது கையை பிடித்து சீனாவின் உள் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார் யூ ஹூவா.

அன்றைய காலகட்டத்தில் ரத்தம் விற்பது என்பது சீனாவில் வாழும் ஏழைகளின் தொழிலாக இருந்தது. ரத்தம் விற்பது மூலமாக 35 யுவான் வரை கூலியாகத் தரப்பட்டது. இது ஆறு மாதங்கள் வயல்களில் விவசாயம் செய்தால் என்ன கிடைக்குமோ அதைவிட அதிகமான தொகையாகும்.  வியர்வை சிந்தி கூலி பெறுவதும், ரத்தம் கொடுத்து பணம் பெறுவதையும் ஒன்றெனக் கருதினர் அன்றைய சீனர்கள்.

மக்கள் தொகையில் அனைவரையும் விஞ்சிய ஒரு தேசத்தில் வறுமை என்பது வாசல் படி போன்றது.  பதற்றம் நிறைந்த மாவோ காலத்து சீனாவின் குடும்ப வாழ்க்கை முறையையும், சற்றே மாறுபாட்ட வாழ்வியல் கூறுகளையும் மிக நிதானமாக விவரிக்கிறார் யூ ஹூவா. வாழ்வின் படிமங்களையும் நுண்ணிய வாழ்வியல் முறைகளையும் மிக அனாயசமாக கடந்து  பயணிக்கிறது நாவல். 

1960-களில் யூ ஹூவா  பிறந்தபோது நிலவிய கடும் பஞ்சம், லட்சக் கணக்கான சீனர்களைப் பலிகொண்டது. 1959-இல் தொடங்கி மூன்றாண்டுகள்  வரை பஞ்சம் நீடித்தது. அவரது மாணவப் பருவத்தில் சீனாவில் கலாசார புரட்சி நடந்தது. இருபதாம் நூற்றாண்டில் சீனர்கள் சந்தித்த இன்னல்கள் நிறைந்த வாழ்க்கை முறையை விஷமத்தனமான நகைச்சுவையோடும் சொல்கிறது இந்த நாவல்.

ரத்தம் கொடுக்கும் முன்னர், சிறுநீர் கழித்துவிட்டால் அது ரத்தமாக மாறாமல் சிறுநீராக வெளியே வீணாக போய்விடும்  என்பதால் ரத்தம் கொடுக்கும்வரை சிறுநீர் கழிக்காமல் இருப்பது போன்ற கிராமத்து அறியாமை இந்த நாவல் முழுவதும் ஆங்காங்கே விரவிக் கிடக்கிறது. 303 பக்கங்கள் கொண்ட புகழ்பெற்ற நாவலை சந்தியா பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். இந்த நாவல் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. இதை எழுத்தாளர் யூமா வாசுகி மொழி பெயர்த்துள்ளார்.

யூ ஹூவா சீனாவின் மரபுகளை மீட்டெடுக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக துளிர்த்து இருக்கிறார். கடந்த இருபது ஆண்டுகளில் மிகவும் பேசப்பட்ட, வாசகர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீனாவின் பத்து நூல்களில் யூ ஹூவாவின் "ரத்தம் விற்பவனின் சரித்திரம்" இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.