சென்னை ஐ.சி.எப். பகுதியில் கொலை செய்யும் திட்டத்துடன் பதுங்கியிருந்த இளைஞரை பெண் காவல் ஆய்வாளர் மடக்கிப் பிடித்து கைது செய்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி திங்கள்கிழமை இரவு ஐ.சி.எப். ரயில்வே குடியிருப்பு அருகே காரில் ரோந்துப் பணிக்கு சென்றார். அப்போது, அங்கு ஒரு இளைஞர் பதுங்கி இருந்தார்.
போலீஸாரை பார்த்தும் அந்த இளைஞர் தப்பியோடினார். இதையடுத்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, இளைஞரை விரட்டிப் பிடிக்க முயன்றபோது அந்த இளைஞர் கத்தியால் குத்த முயன்றார்.
சாதுர்யமாக அவரது தாக்குதலை தடுத்த காவல் ஆய்வாளர், தனது கார் ஓட்டுநரான காவலர் பிரபு உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றார்.
விசாரணையில், அந்த இளைஞர், அயனாவரம் பழனி ஆண்டவர் தெருவைச் சேர்ந்த ச.சஞ்சீவ்குமார் (21) என்பது தெரியவந்தது. அவர், தனது சகோதரர் சுப்பிரமணிய ராஜூவை கொலை செய்ய முயன்ற அருண் என்பவரை கொல்வதற்காக அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் சஞ்சீவ்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இச்சம்பவத்தில் இளைஞரை துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த பெண் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியையும், காவலர் பிரபுவையும் சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் ஏ.கே. விசுவநாதன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.