இன்றைய பிரச்னைகளுக்கெல்லாம் அன்றே தீர்வு சொன்னவை நம்முடைய தமிழ் இலக்கியங்கள் என்று திருநெல்வேலி அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சி இயக்குநர் சுந்தர ஆவுடையப்பன் கூறினார்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் என்றும் புதியது என்ற தலைப்பில் அவர் பேசியது:
அமெரிக்காவில் ஒரு புத்தகம் பரபரப்பாக விற்றுக் கொண்டிருக்கிறது. ஜான் டி.ஸ்நைடர் எழுதிய ஏஐஎஏரஅவந பஞ கஉஅதசஐசஎ என்ற புத்தகமே அது. அது என்ன சொல்கிறது? ஏன் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும்? எப்படி கற்றுக் கொள்ள வேண்டும்? எதற்காக கற்றுக் கொள்ள வேண்டும் என்பன போன்ற விஷயங்களை மிகவும் எளிய முறையில் அந்நூல் விளக்குகிறது. இதை நம்நாட்டைச் சேர்ந்த பலரும் கூட வாங்கிப் படிக்கிறார்கள். இந்த நூல் கூறும் கருத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நமது திருவள்ளுவர் சொல்லிவிட்டார்.
கற்க... எதையும் கற்றுக் கொள். கற்றுக் கொள்ள வேண்டியதை கசடறக் கற்றுக் கொள். எதற்காகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கற்றுக் கொண்ட விஷயங்களில் ஏற்புடையதைத் தேர்ந்து எடுத்து அதன்படி நிற்க வேண்டும் என்று திருவள்ளுவர் அன்றே சொல்லிவிட்டார்.
சமூகநீதிக்கான அக்கறை இப்போது உள்ளது. உயர்வு, தாழ்வு எதுவுமில்லாமல் எல்லாரும் சமமாக வேண்டும் என்ற விருப்பமே இந்தச் சமூகநீதிக்கான அடிப்படை. இப்போது பொருளாதார ரீதியாகவும் இட ஒதுக்கீடு வந்துவிட்டது. இந்தப் பிரச்னையைப் பற்றி புறநானூற்றில் உள்ள ஒரு பாடல் பேசுகிறது. அந்தப் பாடல், உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே என்று தொடங்கும் பாடல்.
தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குத் தேவைப்படும்போது உதவி செய்ய வேண்டும். அவருக்குப் பொருள் கொடுத்து அவரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்க வேண்டும். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், நன்றாகக் கல்வி கற்ற பிள்ளையின் மீது தாய்க்கு அன்பு அதிகமாகும். கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் கல்வி கற்கச் செல்லும் நிலை ஏற்படும் என அந்த காலத்திலேயே இடஒதுக்கீடு பற்றி பேசியது இந்தப் பாடல்.
இன்று வாழ்க்கையில் முன்னேற பலரும் பலவிதங்களில் முயல்கின்றனர். ஆனால் எல்லாரும் வெற்றி பெறுவதில்லை. என்ன முயற்சி செய்தாலும் அவர்கள் முன்னேற முடிவதில்லை. இதற்குக் காரணம் விதி. இதை திருவள்ளுவர், ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் என்ற குறளில் சொன்னார். ஆனால் அவரே ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் என்றார். முயற்சி செய்தால் விதியையும் வெல்லலாம் என்றார். இவை போல இன்று நாம் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளுக்கான தீர்வுகளை அன்றே சொல்லியவை - வழிகாட்டியவை நமது தமிழ் இலக்கியங்கள் என்றார்.
விழாவில் ஓதுவது ஒழியேல் என்ற தலைப்பில் செல்லம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் விமலா அண்ணாதுரை பேசினார். அவர் பேசியதாவது:
ஓதுவது ஒழியேல் - அதாவது படிப்பதை விட்டுவிடாதே என்று ஒளவையார் சொன்னதை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றைப் படித்து அதன் பொருளை உணர்ந்து நடைமுறையுடன் செயல்படுத்துவதையே ஒளவையார் ஓதுதல் என்றார்.
புத்தகங்களை எதற்காக நாம் படிக்க வேண்டும்? இன்று நாம் புதிதாகப் பிறக்க வேண்டும் என்றால் புத்தகங்களைப் படிக்க வேண்டும். நாம் படிக்கும் ஒவ்வொரு புதுவிஷயமும் நம்மை புதுமனிதனாக்குகிறது. அதனால் நாம் புதிதாகப் பிறக்கிறோம்.
புத்தகம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திருவள்ளுவர் இடுக்கண் வருங்கால் நகுக என்றார். துன்பம் வரும் போது எப்படிச் சிரிக்க முடியும்? என்ற கேள்வி எழும். துன்பத்தில் நாம் மூழ்கிவிட்டால் நம்மால் சிரிக்க முடியாது.
நமக்கு வந்த துன்பத்தைப் பிறருக்கு வந்த துன்பமாகக் கருதி, அதாவது துன்பத்தில் இருந்து விலகி நின்று பார்த்தால், அதற்கான தீர்வு கிடைக்கும். இடுக்கண் வரும்போது துன்பத்தை விலகி நின்று பார்த்தால், நம்மால் சிரிக்க முடியும் என்கிறார் வள்ளுவர்.
ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்ற அறிஞர், அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். அவர் நமது தமிழைப் பற்றிச் சொன்னதைக் கூற விரும்புகிறேன். தமிழில் இருப்பதை போல சமூகச் சிந்தனைகள் உலகின் வேறு எந்த மொழியிலும் இல்லை என்றார் அவர்.
எதையும் நாம் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும். இதையே எனைத்தானும் நல்லவை கேட்க என்று வள்ளுவர் சொன்னார்.
இப்போது கேட்கக் கூடிய காலம் போய்விட்டது. இது பார்க்கக் கூடிய காலம். செல்போன், தொலைக்காட்சியைப் பார்க்கிறோம். பிறருடன் பேச முடிவதில்லை. பிறர் சொல்வதைக் கேட்க முடிவதில்லை. புத்தகங்கள், நண்பர்கள் பேசுவதைப் போல நம்மிடம் பேசுகின்றன.
நம் குற்றங்களை நாமே தெரிந்து கொள்வதற்குப் புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்களைப் படிப்பதன் மூலம் நமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான செய்திகளையும் உள்வாங்க முடியும். எனவே படிப்பதை விட்டு விடாதீர்கள். அதைத்தான் ஓதுவது ஒழியேல் என ஒளவையார் கூறியுள்ளார் என்றார்.
விழாவில் கவிஞர் ஜெயங்கொண்டான் திருக்குறளும் தேனருவியும் என்ற தலைப்பில் பேசினார். பபாசி நிர்வாகிகள் வயிரவன், பெ.மயிலவேலன், நிரந்தரப் புத்தகக் கண்காட்சி உறுப்பினர் பி.எம்.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று அவசரநிலை: சி.பி. ராதாகிருஷ்ணன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


