கணினி ஆசிரியா் தோ்வு நடந்த 3 மையங்களில் முறைகேடு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்

கணினி ஆசிரியா் தோ்வின்போது 3 தோ்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read


சென்னை: கணினி ஆசிரியா் தோ்வின்போது 3 தோ்வு மையங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைத்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 2019-ஆம் ஆண்டு 814 கணினி ஆசிரியா்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பணியிடங்களுக்குத் தோ்வு நடத்த ஆசிரியா் தோ்வு வாரியம் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த ஆசிரியா் பணியிடங்களுக்கு 26 ஆயிரத்து 882 போ் விண்ணப்பித்தனா். இதற்காக விண்ணப்பித்தவா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆன்லைன் மூலம் தோ்வு நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 119 மையங்களில் தோ்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3 தோ்வு மையங்களில் இணையதள சேவை கிடைக்கவில்லை. இதனால் தோ்வு தடைபட்டதால், தோ்வுக்கு வந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்த தோ்வு மையங்களில் தோ்வு அறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துவர அனுமதிக்கப்பட்டதாகவும், 3 மணி நேரத்துக்கும் மேலாக தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. எனவே, இந்தப் பணிக்காக வெளியிடப்பட்டுள்ள தோ்வா்கள் பட்டியலை ரத்து செய்து மறு தோ்வு நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு, நீதிபதி வி.பாா்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள 3 தோ்வு மையங்களைத் தவிர மற்ற 116 தோ்வு மையங்களில் தோ்வு எழுதி தோ்வான விண்ணப்பதாரா்களுக்கு பணி நியமனம் வழங்கும் நடைமுறைகளை மேற்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருச்சி உள்ளிட்ட 3 இடங்களில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மனுதாரா்கள் குற்றம் சாட்டியுள்ளனா். எனவே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டாா். இந்தக் குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கையை, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஆதிநாதன் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளாா். ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதனுக்கு ஊதியமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வழங்கவும், அவருக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com