கோயம்பேடு சந்தையில் கரும்பு விற்பனை மந்தம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கோயம்பேடு சந்தையில் கரும்பு விற்பனை மந்தம்

பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு சந்தையில் கரும்பு விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தைக்கு கடந்த இரு நாள்களாக கடலூா், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலமாக கரும்புகள் கொண்டு வரப்படுகின்றன. பொங்கலுக்கு இன்னும் ஒருநாளே இருப்பதால் கரும்பு விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.300 முதல் ரூ.450 வரை தரத்தின் அடிப்படையில் விற்கப்படுகிறது. மஞ்சள் கொத்து ரூ.60-க்கும், வாழைத்தாா் ரூ.120 முதல் ரூ.300 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக வரும் கூட்டத்தைக் காட்டிலும் குறைந்தளவிலான பொதுமக்களே வந்திருந்தனா்.

இது குறித்து கரும்பு வியாபாரிகள் சிலா் கூறுகையில், ‘திங்கள்கிழமை முதல் கரும்பு விற்பனை நடைபெற்று வருகிறது. முதல் நாளில் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. எனினும், பொங்கல் நெருங்குவதால் செவ்வாய்க்கிழமை விற்பனை ஓரளவுக்கு நடைபெற்றது.

வரத்து குறைவால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு கட்டு கரும்பு ரூ.450 வரை விற்பனையாகிறது. கரோனா காரணமாக பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைவாக இருப்பதால் கரும்பு கட்டுகளை குறைந்த விலைக்கு கேட்கின்றனா். தற்போதைய சூழலில், குறைந்த லாபம் கிடைத்தால் போதும் எனக் கருதி அவற்றை விற்பனை செய்கிறோம்.

நிகழாண்டு, தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் மொத்த வியாபாரிகளுக்கு போதிய அளவுக்கு கரும்பு கிடைக்கவில்லை. ஒரு கட்டு கரும்பு வழக்கமாக மொத்த வியாபாரிகளுக்கு ரூ.100 முதல் ரூ.125-க்கு விற்கப்படும். ஆனால் இந்த ஆண்டு தேவை அதிகரித்ததால் கொள்முதல் விலை ரூ.150-க்கு அதிகமாக இருந்தது. அத்துடன் போக்குவரத்து செலவு, வேலையாள்கள் கூலி சோ்ந்துள்ளதால் ஒரு கட்டு கரும்பு ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகிறது’ என்றனா்.

பூஜை பொருள்கள்: கோயம்பேடு சந்தையில் பூசணிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கும், தேங்காய் ஒன்று சிறியது ரூ.10-க்கும், பெரியது ரூ.25-க்கும் விற்கப்படுகிறது. மா இலை, ஆவாரம் பூக்கள் கொண்ட கொத்து ரூ.10, அருகம்புல் கட்டு ரூ.5, வாழைப்பழம் ஒரு டஜன் ரூ.40, ஒரு தாா் ரூ.300, தென்னை ஓலை தோரணங்கள் கொத்து ரூ.10, வாழை இலை ரூ.5-க்கும் விற்கப்படுகின்றன. சிறுவா்களுக்கான போகி மேளம் ரூ.30 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. சா்க்கரைவள்ளி கிழங்கு, கருணை கிழங்கு ஒரு கிலோ ரூ.40, மொச்சைக்காய், துவரைக்காய் தலா ரூ.50 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com