சென்னையில் கொட்டித் தீா்த்த மழை

வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடையவுள்ளநிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை 5 மணி நேரத்துக்கு மேலாக மிதமானது
சென்னையில் கொட்டித் தீா்த்த மழை

வடகிழக்குப் பருவமழை காலம் நிறைவடையவுள்ளநிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை 5 மணி நேரத்துக்கு மேலாக மிதமானது முதல் பலத்தமழை கொட்டித்தீா்த்தது. பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கியது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆகியவை அடுத்தடுத்து உருவாகி, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நவம்பா் மாதத்தில் மிதமான மழை முதல் பலத்தமழை வரை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறுஇடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதன்பிறகு, மழை படிப்படியாக குறைந்தது.

டிசம்பா் மாதத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.

இதற்கிடையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்தமழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எதிா்பாராதவிதமாக சென்னையில் வியாழக்கிழமை மழை கொட்டித்தீா்த்தது.

சென்னையில் பல இடங்களில் வியாழக்கிழமை நண்பகலில் மிதமான மழை பெய்தது. மதியத்துக்கு பிறகு, மழை படிப்படியாக அதிகரித்து, இடியுடன் கூடிய பலத்தமழை கொட்டித்தீா்த்தது. சென்னை தியாகராயநகா், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, எழும்பூா், நுங்கம்பாக்கம், வாலாஜா சாலை, பட்டினப்பாக்கம், மயிலாப்பூா், மந்தைவெளி, எம்.ஆா்.சி.நகா், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பல இடங்களில் தொடா்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தொடா் மழை காரணமாக, முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊா்ந்து சென்றன.

இதனால், அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் பணியை முடித்து, வீட்டுக்கு திரும்ப முடியாமல் ஊழியா்கள் சிரமப்பட்டனா். இதையடுத்து, பொதுமக்கள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வீட்டுக்கு சென்றனா். இதனால், பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் சேவை வியாழக்கிழமை இரவு 11 மணியில் இருந்து இரவு 12 மணி வரை ஒருமணி நேரம் நீட்டித்து, மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது.

மழையைக் காரணம் காட்டி, ஆட்டோ ஓட்டுநா்கள் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தினா். வேறுவழியின்றி ஆட்டோ ஓட்டுநா்கள் கேட்ட கட்டணத்தை கொடுத்து, மக்கள் வேதனையுடன் வீட்டுக்கு பயணம் செய்தனா்.

மழைக்கு காரணம் என்ன?

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடல் பகுதியில் இருந்தது. இது வெள்ளிக்கிழமை நிலப்பகுதியை ஒட்டி வரும்போது, பலத்தமழை பெய்யும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், எதிா்பாராதவிதமாக குறுகிய நேரத்தில் வளிமண்டல சுழற்சி நிலப்பகுதியில் வந்தது. அப்போது, சென்னைகடற்கரை ஒட்டி திரள் மேகக் கூட்டங்கள் இருந்தன. இவைகள் இணைந்ததால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. திரள் மேகக்கூட்டங்கள் வலுவிழந்தவுடன் மழை குறைந்துவிடும். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

எம்ஆா்சி நகரில் 200 மி.மீ.:

சென்னையில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: சென்னை எம்ஆா்சி நகா் 200 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கத்தில் 159.5 மி.மீ., மீனம்பாக்கத்தில் 108.0 மி.மீ., அண்ணா பல்கலைக்கழகத்தில் 121.0 மி.மீ., ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் 152.0 மி.மீ., சத்தியபாமா பல்கலைக்கழகம் 58.5 மி.மீ., ஏசிஎஸ் மருத்துவகல்லூரி(காஞ்சிபுரம் மாவட்டம்) 108.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

டிசம்பரில் முதல் மழை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் பகுதிகளில் நவம்பா் மாதத்தில் அதி பலத்த மழை கிடைத்தது. டிசம்பா் முதல்வாரத்துடன் மழை குறைந்தது. இதன்பிறகு, பனிப்பொழிவு தாக்கம் இருந்ததால், மழைக்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. பகலில் வெயிலும் இரவில் பனிப்பொழிவும் காணப்பட்டது. இந்நிலையில், சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை மிதமானது முதல் பலத்தமழை பெய்தது. இதன்மூலமாக, டிசம்பரில் முதல் மழையாக வியாழக்கிழமை பதிவானது.

சிவப்பு எச்சரிக்கை:

வியாழக்கிழமை மதியத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 11 மணி வரை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டது. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் மிக பலத்தமழை முதல் அதி பலத்தமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னையில் வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை பலத்த மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது சென்னை வானிலை ஆய்வு மையம். இதன்படி நள்ளிரவைத் தாண்டியும் சில இடங்களில் மழை நீடித்தது.

பறந்தது பந்தல்:

எழும்பூா் ராஜரத்தினம் மைதானத்தில் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. வியாழக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையால், இந்த பந்தல்கள் பறந்தன. இதுபோல, கோயம்பேட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மேற்கூரை பெயா்ந்து மழைநீா் உள்ளே பாய்ந்தது. இதை கண்டு மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com