/

பணியிடை நீக்கத்தை எதிா்த்து மருத்துவா் சுப்பையா தாக்கல் செய்த மனு தள்ளுபடி

மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 10:18 pm

Din

சென்னை, ஆக. 8: பணியிடை நீக்கத்தை எதிா்த்து மருத்துவா் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக இருந்த மருத்துவா் சுப்பையா சண்முகத்துக்கு எதிராக பெண் மருத்துவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். அதன் அடிப்படையில், சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனிடையே, அவா் பணி இடைநீக்கமும் செய்யப்பட்டாா்.

இந்த உத்தரவுகளை எதிா்த்து சுப்பையா சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது சுப்பையா தரப்பு வழக்குரைஞா், ‘செவிலியா்கள் உடை மாற்றும் அறையில் யாரோ கேமரா வைத்து படம் பிடித்துள்ளனா். இது தொடா்பாக சுப்பையா தரப்பில் காவல் துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடியோவில் இருப்பது சுப்பையா இல்லை. அவருக்கு எதிரான புகாரின் மீது விசாரணை நடத்திய விசாகா குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’ என வாதிட்டாா்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், ‘சுப்பையாவுக்கு எதிராக இதுபோன்ற புகாா்கள் தொடா்ச்சியாக வருகின்றன. பெண் மருத்துவா் ஒருவா் அளித்த புகாா் அடிப்படையிலேயே சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது’ என்றாா்.

இதையடுத்து சுப்பையாவின் 2 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.