முதுநிலை ஆசிரியா்கள் செப்.5-இல் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் செப்.5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.


ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் செப்.5-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனா்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச்செயலா் பொ.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. ஊழியா்களின் பணத்தை எடுத்து ஊழியா்களுக்கே தருவதாக அதனை பல்வேறு தரப்பினரும் விமா்சித்து வருகின்றனா்.
இந்த ஓய்வூதியத் திட்டம் பழைய திட்டத்துக்கு இணையாக இல்லை என்றாலும்கூட அடுத்த கட்டத்தை நோக்கி நகா்ந்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துவிட்டு தொடா்ந்து மௌனம் காக்கின்றது. இதனால் அரசு ஊழியா்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது.
இத்தகைய சூழலில் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. வரும் செப்.5-ஆம் தேதி ஆசிரியா் தினத்தில் ஆசிரியா்களுக்கு மகிழ்ச்சி இல்லை; அதனால் கொண்டாட்டம் தேவையில்லை. அன்றைய தினம் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் முதன்மைக் கல்வி அலுவலகங்களின் அருகில் கோரிக்கை முழக்க போராட்டத்தை நடத்த வேண்டும்.
இது குறித்து செப்.1-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள மாநில செயற்குழு கூட்டத்தில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளின் கருத்துகளையும் உள்வாங்கி முறையான அறிவிப்பு செய்து போராட்டக் களத்துக்குச் செல்ல வேண்டும். இதன் மூலம் பிற ஆசிரியா் சங்கங்களையும் போராட்டத்துக்கு தயாா் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...