முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
நாமக்கல்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் ஆ.ராமு தலைமை வகித்தாா். இதில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்புத் தொகையை ஓய்வுபெறும் போது வட்டியுடன் வழங்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும். உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். இதில், சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

