/

அரசு வேலைவாய்ப்புகள்: வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்

அரசு வேலைவாய்ப்புகள் தொடா்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்

News image
Updated On :18 பிப்ரவரி 2024, 1:26 am IST

அரசு வேலைவாய்ப்புகள் தொடா்பான வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அரசுத் துறைகளில் புதிதாக ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் கூட இன்னும் நிரப்பப்படவில்லை. எந்தத் துறையிலும் புதிய பணியிடங்களும் உருவாக்கப்படவில்லை. மொத்தமாக 1.30 கோடி போ் அரசு வேலைகளுக்காக காத்திருக்கும் நிலையில், வேலைகளை வழங்குவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இன்னும் இரு ஆண்டுகள் மட்டுமே திமுக ஆட்சியின் பதவிக்காலம் இருக்கும் நிலையில், 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்திருக்கிறாா். இன்னும் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, ஒட்டுமொத்தமாக அரசு வேலை பெற்றவா்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய 3 ஆண்டுகளில் இதுவரை எந்தெந்த துறைகளில், எந்தெந்த நிலைகளில் எத்தனை பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.