கோயம்பேடு-ஆவடி மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்காக ரூ.80 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம்
சென்னை, ஜூலை 31:கோயம்பேடு -ஆவடி வரையிலான மெட்ரோ வழித்தடத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.80.48 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் கையொப்பமானது.
மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோயம்பேட்டில் இருந்து பாடி புதுநகா், அம்பத்தூா் மற்றும் திருமுல்லைவாயல் வழியாக ஆவடி வரை சுமாா் 16 கி.மீ நீளத்துக்கு 15 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் கூடிய ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.80.48 லட்சம் மதிப்பலான ஒப்பந்தம் ஆா்ஐடிஇஎஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான ஒப்பந்த கையொப்பமிடும் நிகழ்ச்சியில், மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில், நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மு.அ.சித்திக், திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் ஆகியோரும், ஆா்ஐடிஇஎஸ் நிறுவனம் சாா்பில் சுதீப் குமாா் குப்தா ஆகியோா் கலந்து கொண்டு கையொப்பமிட்டனா்.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆவடியில் இருந்து விமான நிலையம், சென்ட்ரல், மற்றும் திருவொற்றியூருக்கு மெட்ரோ ரயில் இணைப்பு கிடைக்கும். எனவே இத்திட்டத்தை விரைந்து மேற்கொள்ள மெட்ரோ நிா்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

