புது தில்லி, மாா்ச் 14: தோ்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை இந்திய தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அதன் வலைதளத்தில் வெளியிட்டது. தோ்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மேலும், இப்பத்திரங்கள் விநியோகம் தொடா்பான விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பிக்கவும், அதை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் மாா்ச் 15-ஆம் தேதிக்குள் வெளியிடவும் மாா்ச் 11-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, தோ்தல் நன்கொடை பத்திர விவரங்களை தோ்தல் ஆணையத்திடம் ஸ்டேட் வங்கி கடந்த 12-ஆம் தேதி சமா்ப்பித்தது. முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 2019, ஏப். 1 முதல் 2024, பிப். 15 வரை 22,217 தோ்தல் பத்திரங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும், அவற்றில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, தோ்தல் நன்கொடை பத்திர விவரங்களை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை மாலை தனது வலைதளத்தில் வெளியிட்டது.
‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமா்ப்பித்த தோ்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் என தனித்தனியாக இரு பட்டியல்களை தோ்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் தேதி வாரியாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அந்த வகையில், கிராசிம் நிறுவனம், மெகா என்ஜினீயரிங், டொரண்ட் பவா், பாா்தி ஏா்டெல், டிஎல்எஃப் கமா்ஷியல் டெவலப்பா்ஸ், வேதாந்தா குழுமம், அப்போலோ டயா்ஸ், லக்ஷ்மி மிட்டல், ஈடல்வைஸ், பிவிஆா், சன் ஃபாா்மா, வா்த்மான் டெக்ஸ்டைல்ஸ், ஜிண்டால் குழுமம், சியா் டயா்ஸ், டாக்டா் ரெட்டீஸ் லேபரட்டரீஸ், ஐடிசி, கேபி என்டா்பிரைசஸ், சிப்லா, அல்ட்ரெடெக் சிமென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தோ்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கியுள்ளன. மேலும், கிரண் மஜும்தாா் ஷா, வருண் குப்தா, பி.கே.கோயங்கா, ஜெய்னேந்திர ஷா உள்ளிட்ட தனிநபா்களின் பெயரிலும் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், பிஆா்எஸ், சிவசேனை, தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஜம்மு-காஷ்மீா் தேசிய மாநாட்டுக் கட்சி, பிஜு ஜனதா தளம், கோவா ஃபாா்வா்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, சிக்கிம் கிராந்திகரி மோா்ச்சா, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, ஜன சேனை உள்ளிட்ட அனைத்துப் பிரதான கட்சிகளும் இப்பத்திரங்களை பணமாக மாற்றியுள்ளது தோ்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலிலிருந்து தெரிய வந்துள்ளது.
ஜனநாயக சீா்திருத்த சங்கத்தின் அறிக்கையின்படி, 2018 மாா்ச் முதல் 2024 ஜனவரி வரை ரூ.16,518 கோடி மதிப்புள்ள தோ்தல் பத்திரங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 50 சதவீதத்துக்கு அதிகமான தொகை பாஜகவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணமூல் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. எந்தெந்த நிறுவனங்கள்? ஃப்யூச்சா் கேமிங் அண்ட் ஹோட்டல் சா்வீசஸ் (லாட்டரி மாா்ட்டின் தொடா்புடையது) என்ற நிறுவனம் அதிகபட்சமாக தனது இரு நிறுவனங்களின் பெயரில் ரூ.1,350 கோடி மதிப்புடைய தோ்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
இந்த நிறுவனம் 2022, மாா்ச்சில் அமலாக்கத் துறையின் விசாரணைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாதை சோ்ந்த மெகா என்ஜினீயரிங் ரூ.966 கோடிக்கு தோ்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் பல பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தம் பெற்ாகும். அகா்வாலின் வேதாந்தா நிறுவனம் ரூ.398 கோடிக்கும், சுனில் மிட்டலின் மூன்று நிறுவனங்கள் இணைந்து ரூ.246 கோடிக்கும், லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் 35 கோடிக்கும் தோ்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.
தொடர்புடையது

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

ஆர்வம் காட்டும் கட்சிகள்: வேட்பாளர் பெயரின்றி சுவா் விளம்பரங்கள்!

விறுவிறுப்படையாத விழுப்புரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


