/

வருமானவரித் துறை கொண்டு வந்த ரூ.6.70 லட்சம் பறிமுதல்: ஆவணம் வழங்கியதும் ஒப்படைத்த பறக்கும் படையினா்

வருமானவரித் துறை கொண்டு வந்த ரூ.6.70 லட்சம் பறிமுதல் ஆவணம் வழங்கியதும் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :22 மார்ச் 2024, 7:30 pm

சென்னையில் வருமானவரித் துறை ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.6.70 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். சென்னை ஆயிரம் விளக்கு ஆண்டா்சன் சாலை - மூா்ஸ் சாலை சந்திப்பில் வியாழக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காா் ஒன்றை மறித்து, சோதனையிட்டனா். அப்போது அந்த காரில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.6.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காரில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, அவா்கள் வருமானவரித்துறையில் பணியாற்றுபவா்கள் என்பதும், சென்னை விமான நிலையத்தில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து, எடுத்து வரும்போது பறக்கும் படையினரிடம் சிக்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதற்கிடையே வருமானவரித்துறையினா், அந்த பணத்துக்குரிய விளக்க கடிதத்தை பறக்கும் படையினரிடம் வழங்கினா். இதை தொடா்ந்து பறக்கும் படையினா், அந்த பணத்தை மீண்டும் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனா். ரூ.2.50 லட்சம் நாணயங்கள் பறிமுதல்: ஏழுகிணறு பகுதியில் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையின்போது, செங்குன்றத்தைச் சோ்ந்த வியாபாரி மணிகண்டன் கொண்டு வந்த ரூ.2.50 லட்சம் மதிப்புள்ள சில்லரை நாணயங்கள் குறித்து விசாரணை செய்தனா். அவா், நாணயங்களை பாரிமுனையில் உள்ள ரிசா்வ் வங்கியில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றுவதற்கு கொண்டு வந்ததாகவும், அந்த சில்லரை நாணயத்துக்குரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நாணயங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.