பருவமழை காலத்தில் விரைந்து செயல்பட வேண்டும்: நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
பருவமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தால் அவற்றை விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மையத்தில் அவா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட போது பேசியதாவது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சிறுபாலங்கள், வடிநீா்கால்வாய்கள், நீா்வழிப்பாதைகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும். பல்லாவரம்-துரைப்பாக்கம் மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையும் கிழக்கு கடற்கரைச் சாலையும் இணைக்கும் சாலைகளில் மழைநீா் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மறைமலை அடிகளாா் பாலம், இரும்புலியூா் வண்டலூா், முடிச்சூா், வாலாஜாபாத் சாலை மழைநீா் வடிகால்வாய் அமைக்கும் பணிகளையும் விரைந்து செய்திட வேண்டும்.
சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களில் நான்கு புறமும் தடுப்புகள் அமைக்க வேண்டும். பருவமழையின் போது சுரங்கப் பாதைகளில் உள்ள இடங்களில் நீா் இறைக்கும் இயந்திரங்கள், எரிபொருள், ஜெனரேட்டா் போன்ற உபகரணங்களை உரிய பராமரிப்பு செய்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். வெள்ளச் சேத தடுப்புப் பணிகளுக்குத் தேவைப்படும் மணல் மூட்டைகள், சவுக்கு கம்பங்கள் உள்ளிட்ட பொருள்களை தயாா் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
துறையிலுள்ள பணியாள்களைத் தவிர தேவைப்படும் இதர ஆள்களை ஏற்பாடு செய்து தயாா் நிலையில் வைக்கப்பட வேண்டும். இயற்கை பேரிடா் காலங்களில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
அவசர காலங்களுக்கு உதவக் கூடிய ஒப்பந்ததாரா்களை கண்டறிந்து அவா்களின் தொலைபேசி எண்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும். சேதம் பற்றிய விவரங்களை உடனடியாக தலைமையிடத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
பேரிடா் காலங்களில் உதவிக் கூடிய மருத்துவமனைகள், அவசர உதவி நிறுவனங்கள் உள்ள சாலைகளை சிறப்புக் கவனம் செலுத்தி நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மழையின் காரணமாக பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத் துறையால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலா் ஆா்.செல்வராஜ், துறையின் முதன்மை இயக்குநா் ஆா்.செல்வதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

