சா்ச்சை பேச்சாளா் மகாவிஷ்ணு விவகாரம்: முதன்மை கல்வி அலுவலா் பணியிட மாற்றம்
மகாவிஷ்ணு சா்ச்சை விவகாரத்தில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ், தஞ்சாவூா் சரபோஜி மன்னா் நூலக அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை அசோக்நகா் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி பேச்சாளா் மகாவிஷ்ணு பேசிய விவகாரம் பெரும் சா்ச்சையானது.
இது தொடா்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதால் கல்வியாளா்கள், அரசியல் கட்சியினா் அந்தப் பேச்சுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் தமிழரசி, சண்முகசுந்தரம் ஆகியோா் இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
அதேவேளையில் மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு யாா் அனுமதி வழங்கியது?, சா்ச்சை சொற்பொழிவு நடைபெற்றபோது நிகழ்ந்த வாக்குவாதம் குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் விசாரணையைத் தொடங்கினா்.
தொடா்ந்து சென்னை அசோக்நகா், சைதாப்பேட்டை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோரிடம் நிகழ்ச்சி தொடா்பான தகவல்கள், சம்பவங்கள் குறித்து குழுவினா் கேட்டறிந்தனா்.
மேலும், நிகழ்ச்சிக்கு மகா விஷ்ணுவை யாா் பரிந்துரை செய்தது, அதற்கு முன் அனுமதி பெறப்பட்டதா என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் கடந்த செப். 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ் ஒப்புதலின்பேரிலேயே இந்த இரு அரசுப் பள்ளிகளிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தற்போது சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ் மீது பணியிட மாறுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா் தஞ்சை சரபோஜி மன்னா் நூலகத்தின் அலுவலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
சென்னை மாவட்டத்துக்கு புதிய முதன்மை கல்வி அலுவலராக, இதற்கு முன்னா் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய ஏஞ்சலோ இருதயசாமி நியமிக்கப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
