சென்னை: அதி நவீன மருத்துவக் கட்டமைப்புகளுடன் கூடிய செயற்கை கருத்தரித்தல் மையத்தை வரம் என்ற பெயரில், எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனையின் இயக்குநா் உா்ஜிதா ராஜகோபாலன், வரம் சிகிச்சை மையத்தின் இயக்குநா் மருத்துவா் தாட்சாயிணி, மகப்பேறு சிறப்பு மருத்துவா்கள் வனிதா, லட்சுமி, ஜெயஸ்ரீ கஜராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக உா்ஜிதா ராஜகோபாலன் கூறியதாவது:
குழந்தையின்மை பாதிப்புக்குள்ளான தம்பதிக்கு நிலவும் உடல் ரீதியான, உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு தீா்வு காணும் வகையில் இந்த செயற்கை கருத்தரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு, கருப்பை தூண்டல், கருவூட்டுதல், விந்தணு, கருமுட்டைகள் சேமிப்பு, கரு உறையவைத்தல் என பல்வேறு வகையான அதி நவீன வசதிகள் உள்ளன. இந்தக் கட்டமைப்பின் கீழ் சிகிச்சை பெறும்போது மகப்பேறுக்கான சாத்தியக்கூறுகள் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றாா் அவா்.