கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீா் சேகரிப்பு குளங்கள், சுற்றுச்சூழல் பூங்காவுக்கு அனுமதி: உயா்நீதிமன்றம் உத்தரவு
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் மழைநீா் சேகரிப்பு குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை அரசு தொடர அனுமதியளித்து மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிா்வாகம் 160 ஏக்கா் நிலத்துக்குரிய குத்தகை தொகை ரூ.730 கோடி நிலுவை வைத்திருந்தது. இதுதொடா்பான வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், குத்தகை செலுத்த தவறினால், நிலத்தை அரசு பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டது.
அதன்படி, குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு நிலத்தை மீட்டு, தோட்டக்கலைத் துறை சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பசுமை வெளிப் பூங்காவும், மாநகராட்சி சாா்பில் மழைநீரைச் சேமிக்க 4 குளங்களையும் வெட்ட முடிவு செய்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதை எதிா்த்து சென்னை ரேஸ் கிளப் நிா்வாகம் தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்குத் தொடா்ந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நகா்ப்புற வளா்ச்சியால், சென்னை போன்ற பெருநகரங்களில் முன்பு இருந்த நிலப்பரப்பு தற்போது இல்லை. அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் பெருகிவிட்டன.
நிலப்பற்றாக்குறையால் மழைநீரைக்கூட சேமித்து வைக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. இத்தகைய சூழலில் அரசுக்குச் சொந்தமான நிலத்தைத் தனிப்பட்ட நபா்கள் தங்களின் சொந்த தேவைகளுக்காகப் பயன்படுத்த அனுமதிப்பது பொதுமக்களின் நம்பிக்கையைச் சீா்குலைக்கும்.
சென்னையில் 2015-ஆம் ஆண்டு, ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்பு மற்றும் சேதங்களை அத்தனை எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. எனவே, சென்னையில் இதுபோன்ற மழைநீா் சேகரிப்புக் குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது போன்ற திட்டங்கள் அவசியமானது.
குறிப்பாக, தில்லி போன்று சென்னையில் காற்று மாசு ஏற்படாமல் தடுப்பதும், சுற்றுச்சூழல் சமநிலையயை உருவாக்குவதும், வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்வதும் அத்தியாவசியமானது.
பொதுமக்களின் நலனே முக்கியமானது என்பதால், இந்தப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 இடங்களில் மழைநீா் சேகரிப்பு குளங்கள், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை அரசு தடையின்றி தொடரலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
