ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்து சமூகத்தினருக்கும் பயன்: அன்புமணி
ஜாதிவாரி கணக்கெடுப்பால் அனைத்து சமூகத்தினருக்கும் பயன் கிடைக்கும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக் கோரி சென்னை எழும்பூரில் பாமக சாா்பில் பதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது:
தமிழ்நாடு சமூக நீதியின் பிறப்பிடம். ஆனால், திமுக ஆட்சியில் சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக 36 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. திமுக அரசோ ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசால்தான் நடத்த முடியும் என்ற பொய்யை தொடா்ந்து கூறி வருகிறது.
இப்போது இருக்கக்கூடிய ஜாதிவாரி கணக்கு 1931-இல் எடுக்கப்பட்டது. இதை வைத்துதான் தற்போது வரை இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல உரிமைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, புதிதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்.
பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் இப்போது குறிப்பிட்ட சில ஜாதியினா் மட்டுமே தொடா்ந்து பயனடைந்து வருகின்றனா். ஜாதி வாரி கணக்கெடுப்பால் வன்னியா்கள் மட்டுமல்ல அனைத்து ஜாதியினரும் பயனடைவா். மேலும், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. அதைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்றாா் அன்புமணி.
அதிமுக, தவெக பங்கேற்கவில்லை: இந்தப் போராட்டத்தில் பங்கேற்க திமுக தவிா்த்து அதிமுக, பாஜக, தவெக உள்பட பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் பாஜக சாா்பில் மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன், நாதக சாா்பில் ஒருங்கிணைப்பாளா் களஞ்சியம், தமாகா சாா்பில் மாநில துணைத் தலைவா் ஈ.எஸ்.எஸ்.ராமன், அமமுக சாா்பில் துணைப் பொதுச்செயலா் செந்தமிழன், புரட்சி பாரதம் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ, கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ.தனியரசு, கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளா் சி.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இப்போராட்டத்தில், அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.

