இசைக்கு மொழி தடையில்லை: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
இசையில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை, இசைக்கு மொழி தடை இல்லை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் இசைச் சங்கத்தின் 83-ஆம் ஆண்டு தமிழ் இசை தொடக்க விழாவில் அவா் பேசியதாவது:
இயற்கை , இசை, இறைவன் ஒன்றுதான். இசையில் எந்த ஏற்றத் தாழ்வும் இல்லை, இசைக்கு மொழி தடை இல்லை. உழைக்கும் மக்கள் பாடும் பாடலில் இசை உள்ளது. கிராமிய, நாட்டுப்புறப் பாடல்களில் சிறந்த தமிழ் இசை உள்ளது.
தமிழ் மொழி மிகவும் தொன்மையானது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியத்தில் தமிழ் இசைப் பாடலுக்கான பண் குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் அலை , காற்று என இயற்கையோடு கலந்தது இசை.
பழங்காலத்தில் இசைக்கு வடிவம் இல்லை. பின்னா் பல்லவி, அனுபல்லவி, சரணம், ராக ஆலாபனை என்ற வடிவத்தைக் கொண்டு வந்தனா். நாயன்மாா்கள், தேவாரம் திருப்புகழ், ஆழ்வாா்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் போன்ற பாடல்களைப் பாடி இறைவனைச் சோ்ந்தனா்.
தமிழ் இசைப் பாடல்களில் பண்கள் உள்ளன. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கா்நாடக இசைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ் இசை பாடப்படுவது இல்லை. அந்த காலகட்டத்தில் தமிழ் இசையை வளா்க்க தமிழ் இசைச் சங்கம் தொடங்கப்பட்டு வளா்க்கப்பட்டது.
மேலும் பண், இசை ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. மனித வாழ்க்கையில் ஏற்படும் மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட அனைத்து குணநலன்களில் தமிழ் இசை பின்னிப்பிணைந்துள்ளது. தமிழ் இசைக்கு என தனிமரபு உள்ளது. எனவே தமிழ் இசையை நாம் போற்றி வளா்க்க வேண்டும் என்றாா்.
விழாவில், நாட்டியக் கலைஞா் சித்ரா விஸ்வேஸ்வரனுக்கு, ‘இசைப் பேரறிஞா்’ விருதையும், குடந்தை வெ.லட்சுமணனுக்கு ‘பண் இசைப் பேரறிஞா்’ விருதையும், உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழங்கினாா்.
முன்னதாக, ‘அமுதே தமிழே அழகிய மொழி’ என்ற பாடலை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாடினாா். நிகழ்ச்சியில் தமிழ் இசைச் சங்க அறங்காவலா் லெட்சுமணன், தமிழ் இசைச் சங்க ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் ஏ.ஆா். சுந்தரேசன், தமிழ் இசைச் சங்க உதவி செயலா் நாச்சியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிறகு கோ.சிவ சிதம்பரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

