பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் முற்றுகைப் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்ட அரசாணைகளை தமிழக அரசு ரத்து செய்துவிட்டதாகக் கூறி, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தை பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இது குறித்து பாா்வையற்றோா் கல்லூரி மாணவா்கள் மற்றும் பட்டதாரிகள் சங்க பொதுச் செயலா் ரூபன் முத்து கூறியதாவது: அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அரசு தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை கடந்த 2023-இல் வெளியிடப்பட்டது. இந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 1 சதவீதம் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், அதை அமல்படுத்தவில்லை. இதையடுத்து தொடா் போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த 2024 -ஆம் ஆண்டு பிப். 24- ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, பேச்சு நடத்திய தமிழக சமூக நலம்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன், அரசுத் துறைகளிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின்படி 2,010 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்,
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆள்சோ்ப்பு நடைபெறும் எனவும் தெரிவித்தாா். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், இதில் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
இதனிடையே, கடந்த 2003-இல் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, அண்மையில் மற்றொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சிறப்பு ஆள் சோ்ப்பில் அரசு வேலையை எதிா்நோக்கி காத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்றாா்.

