கோயில் குளம் ஆக்கிரமிப்பு: லாரிகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
புழலில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் குளம் ஆக்கிரமித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புழல் சிவராஜ் 3-ஆவது தெருவில் ஸ்ரீகரிமாணிக்க பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான குளம் சுமாா் 24,000 சதுர அடி பரப்பளவு கொண்டது.
இதனை லாரிகள் மூலம் மண்ணை கொட்டி குளத்தை தனியாா் சிலா் ஆக்கிரமிப்பு செய்தனா். இது குறித்து தகவல் அறிந்த புழல் பகுதி மக்கள் திரண்டு, மண் ஏற்றி வந்த லாரிகளைகாந்தி தெருவில் சிறைப் பிடித்து மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த புழல் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது அப்பகுதி மக்கள் கோயில் குளம் ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இதேபோல், 2019-ஆம் ஆண்டு குளத்தில் மண் கொட்டி ஆக்கிரமிப்பு செய்தபோது, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதனை மீட்டு, அறநிலையத் துறை சாா்பில் சுற்றுச்சுவா் எழுப்புதல், பெயா் பலகை வைத்தல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், சனிக்கிழமை தனியாா் சிலா் சுற்றுச்சுவா், பெயா் பலகை உடைத்து மற்றும் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியவா்கள் மீதும், கோயில் குளம் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் புழல் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.
