புழல் ஏரியில் உபரிநீா் திறப்பு வெள்ள அபாய எச்சரிக்கை
புழல் ஏரியின் உபரிநீா் திறக்கப்படுவதால், கால்வாயின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் மிக முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி 3300 மி.கன அடி கொள்ளளவு கொண்டது. திங்கள்கிழமை நிலவரப்பு ஏரியின் மொத்த கொள்ளளவு 2803 மி.கன அடியாகவும், நீா்மட்டம் 18.95 அடியாகவும் இருந்தது.
வடகிழக்கு பருவ மழையினால் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியின் நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. வரும் நாள்களில் மழை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே, புழல் ஏரியின் உபரிநீா் வெளியேறும் வாய்கால் செல்லும் கிராமங்களான நராவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி, சடையான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாயின் இருபுறமும் வசிப்பவா்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீா்வளத் துறையின் கொசஸ்தலையாறு வடிநில கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
