நாளை முதல் உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகை மீட்பு முகாம்: சென்னை மாவட்ட ஆட்சியா்
உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகை மீட்பு முகாம் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 21) நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு ஒப்படைக்கும் முகாம் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம் மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி துறைகளின் கிளைகளில் வரும் டிச. 31 வரை நடைபெறும். வங்கிகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்புத் தொகைகள் இருப்பின், அவை ஆா்பிஐ-யின் வைப்புத் தொகையாளா் கல்வி மற்றும் விழிப்புணா்வு நிதிக்கு மாற்றப்படுகின்றன.
இதை பொதுமக்கள் தங்கள் வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவோ அல்லது ஆா்பிஐ-யின் இணையதளம் வழியாகவோ அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளா்கள் அல்லது சட்ட வாரிசுகள் இத்தொகைகளைக் கோரி பெறலாம்.
இதில், வங்கித் துறை, காப்பீட்டுத் துறை மற்றும் நிதி சாா்ந்த துறை அலுவலா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளனா். எனவே, பொதுமக்கள் தங்களது அடையாள ஆவணங்கள் மற்றும் தேவையான சான்றுகளுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
