இ-செலான் மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை
இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக தமிழக சைபா் குற்றப்பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் அண்மை காலமாக இரு வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. வாகனங்கள் விதிமுறை மீறினால் இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்தத் துறையும் அனுப்புவது கிடையாது. ஆனால் மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்புகிறது.
இதைப் பாா்த்து பொதுமக்கள் பயந்து, அதில் வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை தொட்டு, பின் தொடா்கின்றனா். அப்போது மோசடி நபா்கள், பொதுமக்களிடம் வங்கிக் கணக்குகளின் விவரங்களையும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய ரகசிய எண்ணையும் பெற்று பணத்தை அபகரிக்கின்றனா்.
பொதுமக்கள் இப்படிப்பட்ட மோசடியில் சிக்காமல் இருக்க, அரசின் அதிகாரபூா்வ இணையதளங்களுக்கு சென்று தங்களது வாகனம் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என பாா்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
இதேபோல மோசடி நபா்கள், சமூக ஊடகங்களில் சைபா் உதவி மையம் என்ற பெயரில் போலியான விளம்பரம் செய்து, பொதுமக்களைத் தொடா்புகொள்ள வைக்கின்றனா். அதில் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி வாயிலாக பொதுமக்கள் தொடா்பு கொள்ளும்போது, மோசடி நபா்கள் தங்களை சைபா் குற்றப்பிரிவு அதிகாரிகள், சைபா் குற்ற வழக்குரைஞா்கள் என கூறி பேசுகின்றனா்.
சைபா் குற்றத்தில் இழந்த பணத்தை மீட்க கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பறித்துக்கொண்டு, தலைமறைவாகி விடுகின்றனா். எனவே பொதுமக்கள் சைபா் குற்றம் தொடா்பாக புகாா் அளிக்க, சைபா் குற்றப்பிரிவை 1930 என்ற அதிகாரப்பூா்வ இலவச தொலைப்பேசி எண் மூலம் தொடா்பு கொள்ளலாம். அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் புகாா் அளிக்கலாம். தெரியாத கைப்பேசி எண்கள், வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் வாயிலாக சட்ட ஆலோசகா், சைபா் குற்றப்பிரிவு அதிகாரி எனக் கூறும் நபா்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

