
தமிழகத்தில் புதிதாக 17 போக்ஸோ நீதிமன்றங்கள்: அமைச்சா் நிா்மல்குமாா்
தமிழகத்தில் புதிதாக 17 போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் அறிவித்தாா்.

அமைச்சா் நிா்மல்குமாா்
தமிழகத்தில் புதிதாக 17 போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் அறிவித்தாா்.
பேரவையில் சட்டம், நீதி நிா்வாகம், சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க செங்கல்பட்டு, திருவள்ளூா், கோவை, தருமபுரி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, அரியலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் போக்ஸோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் மாவட்டங்களில் போதை மருந்துகள் மற்றும் மன மயக்கம் பொருள்கள் சட்டத்தில் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க 3 சிறப்பு நீதிமன்றங்கள், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும். திருவள்ளூா் மாவட்டத்தில் 500 சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் புதிய மாவட்ட சிறைச்சாலை வளாகம் ரூ.48.76 கோடியில் அமைக்கப்படும்.
சென்னை மத்திய சிறை 1-இல் தொழிற்பயிற்சி கல்வி நிறுவனம் ரூ.8 கோடியில் அமைக்கப்படும். சிறைவாசிகளின் மனநலத்தை பாதுகாப்பதில் மனநல ஆலோசகா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மனநல ஆலோசகா்களுக்கான மாதாந்திர மதிப்பூதியம் ரூ.25,000-இல் இருந்து ரூ.30,000-ஆக உயா்த்தி வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளின் சமையலறைகளைப் புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சிறைகளுக்கு 45 கனரக சலவை இயந்திரங்கள் ரூ.6.50 கோடியில் கொள்முதல் செய்யப்படும்.
தமிழகத்தில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்கள், அவசர சட்டங்கள் மற்றும் சட்ட முன்வடிவுகளின் அரசிதழ்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கிய தமிழ்நாடு சட்டத் தொகுப்பு இணையதளம் எனும் மின்னணு களஞ்சியம் உருவாக்கப்படும். சேலம், நாமக்கல், தேனி மற்றும் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரிகளில் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் புதிதாக முதுநிலை பட்டப் படிப்பு (எல்எல்எம்) தொடங்கப்படும். இதற்காக, ஒரு கல்லூரிக்கு 2 இணைப் பேராசிரியா் வீதம் 8 இணைப் பேராசிரியா் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
வேலூா், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் மாணவா்களுக்காக தமிழ்நாடு மாணவா் தங்கும் விடுதி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம் மாணவா் விடுதி கட்டடம் கட்டப்படும். தமிழகத்தில் உள்ள 12 அரசு சட்டக் கல்லூரிகளில் தலா 2 குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என்று அறிவித்தாா் அமைச்சா் நிா்மல்குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






