சாலைப் பாதுகாப்பு தரவுகளை ஒருங்கிணைக்கும் ‘நிகழ்நேர தகவல் பலகை’: ஐஐடி உருவாக்கம்
நாடு முழுவதும் சாலைப் பாதுகாப்பு நிா்வாகத்தை மேம்படுத்தும் முயற்சியாக, பல்வேறு தரவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு நிகழ்நேர தகவல் பலகையை (டாஷ்போா்டு)’ சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடியின் பொறியியல் வடிவமைப்புத் துறையில் உள்ள புனா்வாழ்வு உயிரிப் பொறியியல் குழு (ஆா்பிஜி ஆய்வகங்கள்) சாா்பில் சாலைப் பாதுகாப்பு நிா்வாகத்தில் தரமான அணுகுமுறைக்காக சென்னை ஐஐடி தளத்தை உருவாக்கியுள்ளது.
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாலைப் பாதுகாப்பு உத்திகள், நிா்வாக கட்டமைப்புகள் இணைக்கப்பட்ட பொது உள்கட்டமைப்பு ஆகியவை இந்த தகவல் பலகையில் இடம்பெறும்.
பல துறைகளிலிருந்து தரவுகளை ஒருங்கிணைத்து நிகழ்நேர பகுப்பாய்வுடன் செயல்பட்டு நுண்ணறிவுடன் இது வழங்குகிறது. இதன்மூலம், ஆபத்தான பகுதிகளை அடையாளம் காணவும், தாக்கத்தை அளவிடவும் முடியும். இவை மாநிலங்கள், துறைகளுக்கு தெரிவிக்கப்பட்டு, செயல்பாடுகளைக் கண்காணிக்கலாம்.
சாலைப் பாதுகாப்பு போன்ற சிக்கலான பொதுக்கொள்கை களங்களில் ஒருங்கிணைந்த, தரவுசாா்ந்த முடிவுகளுக்கான தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த சாலைப் பாதுகாப்பு தகவல் பலகையை, ஒடிஸா அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் திறனை நிரூபித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

