வடபழனி - பூந்தமல்லி இடையே பிப்ரவரிக்குள் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
வடபழனி - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான இறுதிக்கட்ட ஒப்புதலை இந்திய ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை 2 வழிப்பாதையாக இயங்குகிறது. இதையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் 2 -ஆம் கட்ட வழித்தடத்தில் 3 -ஆவது பாதையானது, மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி சுற்றுச்சாலை வரை 26 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப் பணியை தொடங்கியது. தற்போது வடபழனி முதல் பூந்தமல்லி வரை 16 கி.மீ. தொலைவு ரயில் பாதை அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துவிட்டது.
அந்தப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தட அமைப்பு சோதனை நடத்தப்பட்டு அதற்கான சான்று பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான பாதுகாப்பு சான்று பெறுவதற்கு மத்திய ரயில்வே வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. தற்போது அதற்கான அனுமதியை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வரும் பிப்ரவரிக்குள் வடபழனி - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன. முதலில் ஓட்டுநருடன் இயக்கப்படவுள்ளதாகவும், பின்னா் ஓட்டுநா் இல்லா ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

