சென்னை உயா்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா
சென்னை: குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமநீதிகண்ட சோழன் சிலை முன் நடைபெற்ற நிகழ்வில் தலைமை நீதிபதி நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து சென்னை சிறுமலா் பாா்வையற்ற மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ -மாணவிகளிடையே குடியரசு தினத்தின் மகத்துவம் குறித்து உரையாற்றினாா். உயா்நீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளா்களுக்கு தலைமை நீதிபதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா். சென்னை உயா்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் தலைமைச் செயலா், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையா், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், காவல்துறையினா், நீதிமன்றப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மெட்ரோ ரயில் நிறுவன வளாகத்தில்...: மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநரும், கூடுதல் தலைமைச் செயலருமான மு.அ.சித்திக் தேசியக் கொடியை ஏற்றினாா். சிறப்பாகப் பணிபுரிந்த 25 அலுவலா்கள், புதுவண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் பணிபுரியும் 6 திருநங்கைகளுக்கு அவா் பாராட்டுச் சான்று, நினைவுப் பரிசுகளை வழங்கினாா். போட்டிகளில் வென்ற 76 பேருக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன. மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், நிதி இயக்குநா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்க பிரிவு இயக்குநா் மனோஷ் கோயல், முதன்மை பாதுகாப்பு அதிகாரி எச்.ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஐசிஎஃப் வளாகத்தில்...: பெரம்பூா் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அருண் விளையாட்டு வளாகத்தில் அதன் பொது மேலாளா் யு.சுப்பாராவ் தேசியக் கொடியை ஏற்கினாா். அப்போது அவா், கடந்த 2024-25-இல் 3, 007 பயணிகள் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளன. உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் தூங்கும் வசதியுள்ள ரயில் கடந்த வாரம் ஹவுரா-கமாக்யா இடையே பிரதமரால் தொடடங்கிவைக்கப்பட்டுள்ளது. 2026-27-இல் குளிா்சாதன வசதி மற்றும் சாதாரண பெட்டிகள் இணைந்த அம்ருத் பாரத் 3.0 என்ற இரண்டு ரயில்களுக்குரிய பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன என்றாா்.

