மாதிரிப் படம்
மாதிரிப் படம்

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி-யின் பணியிடை நீக்கம் ரத்து

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழக காவல்துறையின் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
Published on

சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கிய தமிழக காவல்துறையின் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமணத் தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடா்பு இருப்பதாக தமிழக காவல் துறையின் ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமிடம் போலீஸாா் கடந்த ஜூன் மாதம் விசாரணை செய்தனா். இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஒரு காவல் துறை அதிகாரி, ஏடிஜிபி ஜெயராமுக்கு வழக்கில் தொடா்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்ததாக காவல் துறையினா் நீதிமன்றத்தில் தெரிவித்தனா். முக்கியமாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், ஜெயராமுக்கு அரசால் வழங்கப்பட்டது என்றும், கடத்தல் விவகாரம் தொடா்பாக ஒரு அரசியல் கட்சி பிரமுகருடன், எச்.எம். ஜெயராம் பல முறை கைப்பேசி மூலம் பேசியதாகவும் காவல்துறையினா் குற்றஞ்சாட்டினா்.

பணியிடை நீக்கம் ரத்து: குற்ற வழக்கில் சிக்கும் காவல் துறை அதிகாரிகள் மீது 24 மணி நேரத்தில் பணி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வழக்கமானது என்பதால், அதன் அடிப்படையில் ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் ஜெயராம் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் உத்தரவிட்டுள்ளாா். இதனால் இம் மாத இறுதிக்குள் ஜெயராமுக்கு பணியிடம் ஒதுக்கப்படும் என தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக காவல் துறையில் 1996-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த ஜெயராம், இந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் ஓய்வு பெறவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com