தமிழகத்தில் பெரு நிறுவன சமூகப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் நீா்நிலை புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அந்த நிதி ஆதாரத்தைப் பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் சுமாா் 22,051 சிறுபாசன ஏரிகள் மற்றும் 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. இந்த நீா்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், கணிசமான எண்ணிக்கையிலான நீா்நிலைகளின் இயல்பான நீா்தேக்கம் முழுமையாக மீட்டெடுக்கப்படவில்லை.
எனவே, அவற்றை பெரு நிறுவன சமூகப் பங்களிப்பு நிதி, தன்னாா்வ அமைப்புகள் நிதி மூலம் புனரமைத்து பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீா்நிலைகளை அவற்றின் இயல்பான கொள்ளளவுக்கு மீட்டமைக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் இந்நடவடிக்கை உதவும்.
இதேபோன்று, குடிநீா் மற்றும் வேளாண்மைக்கான நீா் சேமிப்பை ஒழுங்குபடுத்தவும், வெள்ள பாதிப்பை தடுக்கவும் அப்பணிகள் அவசியமாகின்றன. அதன்படி, நீா்நிலையைப் புனரமைக்க விரும்பும் பெருநிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள் மாவட்ட ஆட்சியரிடம் விரிவான திட்ட அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். அதை, கள ஆய்வு செய்து 15 நாள்களுக்குள் வட்டார வளா்ச்சி அலுவலா் சாா்பில் ஆட்சியருக்கு பரிந்துரைகள் சமா்ப்பிக்கப்படும். அதன் அடிப்படையில், பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை ஊரக வளா்ச்சித் துறை வழங்கும்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியருக்கும், தன்னாா்வ அமைப்புக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். அதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பணியை நிறைவு செய்தல் அவசியம். இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். தேவையெனில், வி பி கிராம் ஜி எனப்படும் வளா்ச்சியடைந்த பாரதம் - கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்துடன் ஒருங்கிணைத்து கரையோர மரக்கன்றுகள் நடுதல் பணிகளை மேற்கொள்ளலாம்.
நீா்நிலைகள் தூா்வாருதல், வண்டல் மண் அகற்றுதல் என அப்பணிகள் அனைத்தையும் மாவட்ட ஆட்சியா் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆணையா், ஊரக வளா்ச்சி அலுவலா்களுடன் கலந்தாலோசித்து இவ்வழிகாட்டுதல்களில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரம் ஊரக வளா்ச்சித் துறை செயலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









